நவதாராளமய உபாயங்களுக்கேற்ப பொருளாதாரத்தை சீர்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளின் போதும் மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பதினால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இன்றைய கூட்டரசாங்கம் அவற்றை அடக்குவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றது.
ஜனநாயகம் குறித்து இதுவரை போர்த்திக் கொண்டிருந்த பசுத்தோலை நீக்கிவிட்டு போராடும் சக்திகள் மீது அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் விடுத்துக் கொண்டிருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுக்கும் அறிக்கைகள் போராடும் சக்திகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அமைந்திருப்பதாக கட்சி கூறுகின்றது.
யார் எதிர்த்தாலும் திட்டமிட்டபடி வெட்டுகள் தொடருமெனவும், வீதிப் போராட்டத்தில் இறங்கும் சக்திகளுக்கு எதிராக வீதியிலிறக்க அரசாங்கத்திடமும் நபர்கள் இருப்பதாக கூறும் பிரதமரின் கூற்று, எதிர்காலத்தில் கட்டவிழ்த்துவிடப்படவிருக்கும் அடக்குமுறைக்கான எதிர்வுகூறலாகுமென கட்சி பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
நாளுக்கு நாள் உக்கிரமடையும் நெருக்கடியிலிருந்து மீள எதிர்கால திட்டங்கள் இல்லாமையினாலும், உலக மூலதனத்தின் தேவையின் முன்பாக மண்டியிடுவதைத் தவிர மாற்றுவழி இல்லாமையினாலும் மக்கள் விரோத – சமூக விரோத உபாயங்களை தெரிவு செய்திருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு, தமது பயணத்திற்கு பாட்டாளி வர்க்கம் உட்பட மக்கள் சக்திகளிடமிருந்து கிளம்பும் எதிர்ப்புகள் குறித்து பித்துப்பிடித்திருப்பதாகவும், இவ்வாறான அறிக்கைகள் அதன் வெளிப்பாடாகுமெனவும் கூறும் கட்சி, தொடுக்கப்படும் எந்தவொரு அடக்குமுறையையும் எதிர்கொள்ள வர்க்கத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் கூறுகின்றது.
ஏற்கனவே போராட்டத்தில் குதித்திருக்கும் தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், வேலையற்றவர்கள், நகரங்களிலிருந்து விரட்டப்படும் ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து சக்திகளும் இந்த அடக்குமுறையை கண்டு பின்வாங்காது, அடக்குமுறைக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையிலும் கட்சி ஈடுபட்டிருக்கின்றது.