தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!!
கடந்த வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர தயாராகும் நவதாராளமய மறுசீரமைப்புகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கிளம்பும் போராட்டத்தை காட்டிக் கொடுக்க தயாராவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களினது ஓய்வூதியம் வெட்டப்படுதல், தனியார் துறை ஊழியர்களின் 8 மணி நேர வேலை நாளை இரத்துச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானதும், பொதுவாக அரசாங்கம் ஆலோசித்துள்ள தொழிலாளர் உரிமைகளை இரத்துச் செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு எதிரானதுமான போராட்டத்தை தவறாக வழிநடத்தி, காட்டிக் கொடுக்க அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.
இம்முறையும் அரசத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காததற்கு எதிராக உழைக்கும் மக்கள் எதிர்ப்பை தனிப்பட்ட போராட்மாக சித்தரித்து, ஓய்வூதிய வெட்டுக்கு எதிரான போராட்டத்தை மூடிமறைக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக கூறும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், இது குறித்து உழைக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சிகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றது.