இலங்கையில் கடந்த 68 வருடங்களாக சிறுபான்மை இனத்தவராகிய தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களால் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்பட்டு வருவதாக கதையாடல் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகளுக்காக ஓர் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அது முடித்து வைக்கப்பட்டு மறுபடி மீண்டும் இன்று அதே கதையாடல் தொடங்கியுள்ளது.
இந்தக் கதையாடலில் யார் எவருடைய உரிமைகளை மறுக்கிறார்கள், யார் எவருடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், கோஷமிடப்படும் இந்த "உரிமைகள்" பற்றிய வரைவிலக்கணம் என்ன என்பவை தொடர்பாக ஆராயவேண்டிய அவசியம் பெண்களாகிய எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணம் பெண்களாகிய எமக்கு இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற பயந்த-அடிமைத்தன வாழ்வுநிலையே. தமிழர்களில் பெரும்பான்மை மக்களாகிய நாம் சிறுபான்மையினரான ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டு வருகிறோம். தமிழர்களது அரசியல், ஆணாதிக்க ஆளும் வர்க்கத்தினரின் அரசியலாகத்தான் அன்று முதல் இன்று வரை செயற்பட்டு வருகிறது.
குடும்பத்திலிருந்து சமயம்-சம்பிரதாயம்-ஊர்வழமை என ஆரம்பிக்கப்படும் எங்கள் மீதான அடக்குமுறைகள் காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக அரசியல்-அரசாங்கம் என்பவற்றினூடாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
எமது உறவுகளும்-சமூக வட்டங்களும் நாட்டின் சட்டதிட்டங்களும் பெண்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவே நடாத்தி வருகின்றன. குடும்ப வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி பெண்கள் ஆண்களின் பகடைக்காய்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டியபோது அவர்களைத் தவறாகக் கணிப்பிட்ட எமது அதே சமூகம் பிற்காலத்தில் அவர்களை ஆயுதம் ஏந்த வைத்துப் பார்த்துப் பெருமிதம் அடைந்து பின்னர் இன்று அவர்களை சமூகக் கேட்பாரற்ற அனாதைகளாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் ஆதிமூலம் எமது சமூகத்தில் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்க ஆளும்
வர்க்க அதிகாரமே. இவர்களின் கைகளில்- கட்டுப்பாட்டில் தமிழர்களின் அரசியல் வழிகாட்டல் இருக்கும் வரை பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளும் தொடரவே செய்யும்.
எந்தளவுக்குத் தமிழர்கள் தங்கள் சுய உரிமையைக் கோருவதற்கு நியாயம் உள்ளதோ அதேயளவு நியாயம் பெண்களுக்கும் உண்டு என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் தமிழர்களுக்கு தங்களுக்கான உரிமை பற்றிப் பேசத் தகுதி கிடையாது.
அதுமட்டுமல்லாது அவர்களது போராட்டமும் வெற்றி பெறமாட்டாது. ஒரு சமூகத்தின் எத்தகைய மாற்றமும் அச் சமூகத்தில் வாழும் பெண்களின் சம பங்களிப்பு-ஈடுபாடு இல்லாமல் ஏற்படமுடியாது. இதனை ஆண்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ பெண்களாகிய நாம் உணர்ந்து கொண்டு செயற்படும் போதுதான் எமக்குச் சுதந்திரம் கிடைக்க வழியேற்படும். ஆனால் இலங்கையின் இன்றைய சூழலில் நாம் அதனை புரிந்து கொள்வதை தடுக்கும் வகையிலேயே அரசியல் நிகழ்ச்சிநிரல்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகளாவிய அளவில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்கள் கூட்டத்தினுள் ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசியல்ரீதியாக தமிழ் மக்கள் நசுக்கப்படும் போது அதனுடன் ஆண்களின் ஆதிக்கவாத அதிகார ஒடுக்குமுறை பெண்களை மேலும் ஒரு படி அதிகமாகவே நசுக்குகிறது.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் வாழும் பெண்களுக்கு ஆணாதிக்கவாத அடக்குமுறை வகைக்கு வகை இடத்திற்கு இடத்தைப் பொறுத்து பல மடங்குகள் அதிகமாக பலவிதமான பரிமாணங்களுடன் செயற்படுகிறது. இதற்கு பெண்களாகிய நாமும் நம்மை அறியாமலேயே துணை நிற்கிறோம் என்பதுதான் இன்றைய யதார்த்தம். தவறு எங்களுடையதல்ல. எம்மை கற்பித்து வளர்த்த சமூகமே அதற்குப் பொறுப்பு.
அடிமைச்சாசனங்களையும்- அடங்கிப்போவதையும்-ஆணாதிக்கத்தையும் வலியுறுத்தும் சமயங்களை வழிபட்டுக்கொண்டும் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்டவள் பெண் என்பதை நம்பிக் கொண்டும் வாழும் பெண்களாகிய நாம் நமக்கு நம்மவர்களாலேயே மாட்டப்பட்ட விலங்குகளை உடைத்தெறியாதவரை தொடர்ந்தும் பெண்கள் அடக்கப்படுவதும்- மழுங்கடிக்கப்படுவதும்-ஏமாற்றப்படுவதும்- கொல்லப்படுவதுமான வரலாறு நீண்டு கொண்டே செல்லும்.
தங்கள் சுயவாழ்வைத் துறந்து வந்து தமது உயிரை விடத் துணிந்து நின்று எமக்காகப் போராடிய பெண்கள் இன்று வாழ்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இன்றி நடுத்தெருவில் நிற்கையில்; நாட்டுக்கான பொதுப்பணியில் வாழ்க்கைத் துணையைப் பறிகொடுத்த தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் சீவனப்பாட்டுக்கு வழியின்றி அடுத்தவர் தயவை நாடி நிற்கையில்-பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதை இல்லங்களில் பரிதாபத்துக்குரிய சந்ததிகளாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆணாதிக்க அரசியல்வாதிகள் அவற்றை வைத்து வீர வசனங்கள் பேசி வெற்றுச் சவால்கள் விட்டு வழமையான வர்க்க வியாபாரம் நடாத்துகிறார்கள்.
எங்களை-பெண்களை மனிதர்களாக மதிக்கும் சமூகம் உருவாக வேண்டுமானால் நாமே அதற்கான வழிகளைத் தேடவேண்டும். எமது பாதுகாப்புக்கு நாம் அடுத்தவரை நம்பும் எமது அடிமை மனப்பான்மையை மாற்றும் அரசியல் மார்க்கத்தை கண்டறியவேண்டும். எமக்கான பாதுகாப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். 68 ஆண்டு கால எமது ஆண் வர்க்கத்தின் அரசியல்தான் இன்று எமக்கு எதிரான வன்முறைகளுக்கு மூல காரணம்.
காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்ற வண்ணமே இருந்து வந்துள்ளது. அவற்றிற்கான நீதியும் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய சமூக மட்டத்தைப் பொறுத்தே அமைந்து வருகின்றன.
இந்த சமூக மட்டம் என்பது இனம்-சாதி-சமயம்-வர்க்கம்-செல்வாக்கு-உறவுநட்பு என்ற பல அளவுகோல்களுக்கு ஊடாகவே கணக்கிடப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. அதேவேளை எத்தனையோ பெண்களின் கொலைகள் விசாரணைக்கு உட்படாமலேயே தற்கொலைகளாக விபத்துக்களாக சட்டத்தினால் மூடிமறைக்கப்பட்டும் வந்துள்ளன. இதே போன்ற மூடிமறைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடிய விதமாகவே எமது இன்றைய அரசியல் போக்குகளும் காணப்படுகின்றன.
இலங்கையின் இன்றைய நீதிச்சட்டங்கள் ஆண் வர்க்கத்தினால் எழுதப்பட்டு ஆளும் வர்க்க ஆணாதிக்க அரசியல்வாதிகளினாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. நீதி கேட்டுச் செல்லும் பெண்கள் நீதிமன்றங்களில் கேவலப்படுத்தப்படும் நிர்வாகமே இன்று நடைமுறையில் உள்ளது. சட்டத்தின் காவலர்கள் பெண்களை மனிதர்களாக மதிக்கும் அறிவு அற்றவர்களாகவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் பற்றிய ஆண்களின் இந்தக் கண்ணோட்டத்திற்கு எந்தவிதமான எல்லைகளும் கிடையாது.
எம்மை அடக்கி ஆளும், எம்மை ஆட்டுவிக்கும், எம்மை ஆடவைக்கும் ஆண் மேலாதிக்க வாத அரசியலை ஆதரித்துக் கொண்டு நாம் எமக்கான பாதுகாப்பை உருவாக்க முடியாது.
தங்க நகைகளுக்கும் தங்கச் சரிகைப்பட்டுக்களுக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் இயலாது. அரசியல் தளத்தில் அதன் இயங்கு விசைகளாக பெண்கள் நாம் செயற்பட்டு மக்களுக்கான அரசியலை எமது கையில் எடுக்க வேண்டும்.
அவ்வப்போது இடம்பெறும் கொடிய சம்பவங்களின் போது மட்டும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு சுதந்திரமான வாழ்வை உருவாக்கமுடியாது.
எமது சமூகத்தில் எமக்கு எதிராக தற்போது நடைமுறையில் சகல மட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனித உரிமைகளுக்கு முரணான சிந்தனைகள், செயற்பாடுகள் யாவும் தகர்த்தெறியப்படுவதற்கான வழிமுறைகளைத் தேடவேண்டும்.
அதற்கான முதல் முயற்சியாக இன்றைய தேர்தலை நாம் எமது விடுதலைக்கான போர்க்களமாக பயன்படுத்த வேண்டும். அதற்காக நாம் நமக்குள்ளே சில கேள்விகளை கேட்க வேண்டும். தமிழர் அரசியலில் இன்று பெண்களின் பிரதிநிதித்துவம் உண்டா?
ஆம் என்றால் பெரும்பான்மையான பெண்களைக் கொண்ட சமூகத்தில் வேட்பாளர்களின் விகிதாசாரம் எத்தனை? பதில் இல்லையெனின் அதற்கான காரணம் யாது? எமது உரிமைக்கான போரில் பல்லாயிரக்கணக்கில் பெண்களைப் பறிகொடுத்த பின்னரும் இன்றைய ஜனநாயக அரசியலில் எங்களின் பிரதிநிதித்துவம் பூச்சியமாக இருப்பது ஏன்?
சுயாட்சி கிடைத்துவிட்டால் பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்போம் என்று கோஷமிடுபவர்கள் யார்? பெண்கள் பற்றி அவர்களின் மதிப்பீடு என்ன? தமிழர் ஆட்சியும் தமிழ் பொலிசாரும் பெண்களுக்கு சம உரிமையை வழங்குவார்களா? இவற்றிற்கான உண்மையான-யதார்த்தமான பதில்களை கண்டடைவதன் ஊடாகவே நாம் எமக்கான பாதுகாப்புக்கு வழி காணமுடியும்.
சீவி முடிச்சு சிங்காரிச்சு நின்று கொண்டு ஆண்களின் அதிகாரத்தை பண்பாடு-கலாச்சாரம் என்ற போர்வையின் கீழ் அங்கீகரித்து நிற்கும் வரை நாம் அடிமைகளாகவும், தலையாட்டும் பொம்மைகளாவும், பயந்தாங்கொள்ளிகளாகவும், கசக்கி வீசப்படுகிறவர்களாகவும், கடித்துக் குதறப்படுகிறவர்களாகவும், பரிதாபத்திற்குரியவர்களாகவும், பாவனைப் பொருட்களாகவும் விளங்குவது
தவிர்க்கமுடியாது.
பெண்கள் உரிமைகளுக்காக என்ற கோதாவில் "நட்டநடு நிசியில் பெண்கள் பயமின்றி நடமாடினார்கள்" எனவும் "மரண தண்டனை பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்" என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்தக் கருத்துக்கள் நிச்சயம் சாதாரண பெண்களின் வாழ்வு பற்றிய கரிசனம் கொண்டவர்களாலோ அல்லது மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டவர்களாலோ முன் வைக்கப்பட முடியாது.
அடக்குமுறை ஆட்சியை ஆதரிப்பவர்களும், உரிமைகளுக்கு வெள்வேறு அளவுகோல்களை கொண்டிருப்பவர்களும் மட்டுமே இப்படியான கருத்துக்களை முன்வைக்கமுடியும். புங்குடுதீவுக் கொடுமைக்கு நீதி வேண்டும் என்ற பெயரில் அவரவர்தங்களுக்கு லாபம்தான் தேடுகிறார்கள்