Language Selection

ஜெகதீசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1977 இல் தமிழீழத்திற்கு ஆணை கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர், வடக்கு-கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்து, அண்ணன் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி ஏற்றிருந்தார். அரச சலுகைகள், சொகுசு வாகனங்கள், பாதுகாவலர்கள் என எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட அமிர்தலிங்கமும் அவரது கட்சிக்காரர்களும் தமிழீழக் கோரிக்கையினை கைவிட்டனர். சொந்தங்களிற்கும், நெருக்கமானவர்களிற்கும் அரச பதவிகள், வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதிலேயே மிகவும் அக்கறையுடன் செயற்பட்டனர்.

இவர்கள் தமிழீழத்திற்க்காக பாராளுமன்றத்தில் செயற்படுவார்கள் என நம்பிய மக்களும், இளைஞர்களும் இவர்கள் மேல் கடுப்பும், வெறுப்பும் அடைந்தனர். இந்த நேரத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்று உலகத்தை ஏமாற்ற ஜே. ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்த "வெற்றுப் பானையான மாகாணசபை"யில், தமிழ் மக்களிற்கு தீர்வு உண்டு என்று கூறிக் கொண்டு மாகாணசபை தேர்தலில் வாக்கு கேட்டு தமிழர் விடுதலை கூட்டணியினர் வந்த போது கோபங் கொண்டெழுந்த இளைஞர்களால் கரவெட்டி பகுதியில் வைத்து ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.

கூட்டணியினர் அரசியல் வழியில் பயணித்த இளைஞர்கள், கூட்டணியினர் மீது வெறுப்படைந்து தீவிரவாதத்தை நாடி ஆயுதமேந்திய போராட்டத்தினை முப்பது வருடங்களிற்கு மேலாக நடாத்தி முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்து போன வரலாறு எமக்கு முன்னால் உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள் மற்றும் வேறு இயக்கங்களில் இருந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து புலிகள் உருவாக்கிய தமிழத் தேசிய கூட்டமைப்பு ஆனது புலிகளின் அரசியல் தேவைக்கு ஏற்ப இயங்கியது. புலிகள் அழிக்கப்பட்டதும் இந்திய ஆட்சியாளர்களின் கைம்பொம்மையாக மாறி இந்திய அரசின் பொருளாதார, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்காக தாம் உலக நாடுகளிடம் நியாயம் கேட்டு தீர்வை பெற்றுத் தருவோம் எனவும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்விடங்களை விடுவிக்கப் போராடுவோம் என உறுதி மொழி வழங்கி, மக்களை நம்ப வைத்து பெரு வெற்றி பெற்று பாராளுமன்ற கதிரைகளையும், அரச வசதிகளையும், சுகபோகங்களையும் பெற்று தம்மை மேம்படுத்திக் கொண்டனர். மக்களிற்கு வழங்கிய உறுதி மொழிகளை குப்பைக்குள் வீசி எறிந்து விட்டனர் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.

இன்று இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரம் மிக தீவிரமாக அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு எதிரான போராட்டங்களை மாணவர்களும், மக்களும், இடதுசாரிகளும் தெற்கில் பரவலாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சங்கூதும் முன்னெடுப்புகள் ஆரம்பித்துள்ளன. தொழிலாளர்களிற்கு சாதமாக இருந்த சட்டங்கள் முதலாளிகளிற்கு சாதகமாக மாற்றப்படுகின்றன. புதிதாக அரச வேவைகளிற்கு சேர்த்துக் கொள்ளப்படுபவர்களிற்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகின்றது. தனியார்துறை ஊழியர்களின் சேமலாப நிதியினை கொள்ளையிடும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. மொத்தத்தில் மக்களிடமிருந்து கோவணத்தை தவிர அனைத்தையும் பறித்தெடுப்பதற்கான நவதாரளவாத பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாட்டின் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கும் சம்பந்தரோ மேற்கூறிய ஆபத்துக்கள் குறித்தோ அன்றி போராடும் மாணவர்கள், பொதுமக்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்தோ இதுவரை அக்கறை கொண்டது கிடையாது. குறைந்த பட்சம் தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியதோ, மக்களுடன் இணைந்து நின்று போராட்டங்களை நடாத்தியதோ கிடையாது. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக போராடும் போதெல்லாம் அதனை மழுங்கடிக்கும் விதமாக செயற்படுகின்றது இந்த கூட்டமைப்பு. "போராடாதையுங்கோ நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்." "உண்ணாவிரதமிருந்து கெடுத்து விடாதையுங்கோ" என்று போராடும் மக்களை குழப்பி குழப்பி, இன்று மைத்திரி – ரணில் அரசு அரசியல் கைதிகள் கிடையாது உள்ளே உள்ளவர்கள் குற்றவாளிகள் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது கூட்டமைப்பு.

காணாமல் போனவர்களை குறித்தும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது குறித்தும் எந்த அக்கறையும் அற்றவர்கள் தான் கூட்டமைப்பினர்.

அமெரிக்கா மற்றும் இந்திய ஆட்சியாளர்களினால் நவதாராளவாத பொருளாதாரத்தை தீவிரமாக முன்னெடுப்பதற்கு மைத்திரி – ரணில் ஆட்சிக்கு இடையூறு வராமல் இருப்பதற்க்காகவும், நாட்டில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினை மீள எழுச்சி பெறாமல் இருப்பதற்க்காகவும் தமது விசுவாசிகளான, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட ஒரு பதவியே இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி.

எனவே சம்பந்தரும் அவரின் கட்சியினரும் பாராளுமன்றத்தில் மௌனத்தை கடைப்பிடித்து, தூங்கி வழிந்து கொண்டிருப்பதுடன் இருப்பதுடன், எப்போதெல்லாம் மக்கள் போராடுகின்றரோ அங்கே போய் அவற்றை குழப்பும் விதமாக “நாங்கள் செய்ய வேண்டிய விடயங்களை செய்வோம் பொறுமையாக இருங்கோ” என கூறி மக்களின் போராட்ட எழுச்சி வடிந்து போகும் வண்ணம் கைங்கரியமாக செயற்படுகின்றனர்.

பலாலியிலிருந்து மையிலிட்டி வரை இந்திய நலன்களிற்க்காக பொது மக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அண்மையில் மூதூருக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைக்க சென்ற சம்பந்தர், அங்கு சம்பூர் அனல் மின்னிலைத்திற்கு எதிராக போராடிய மக்கள் மத்தியில், "இந்தியா இதனை அமைக்கவில்லை என்றால் சீனா இந்த இடத்தில் அனல் மின்னிலையம் அமைத்திருக்கும்" என இந்திய அரசின் செயற்பாட்டை நியாயப்படுத்தி பேசி தனது இந்திய விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த அனல் மின்னிலையத்தால் இப்பகுதியில் எதிர்காலத்தில் ஏற்ப்படக் கூடிய மக்கள் உடல்நல குறைபாடுகள் குறித்தோ கடல் வள அழிவுகள் குறித்தோ சம்பந்தருக்கும் அவர் கட்சியினருக்கும் அக்கறை கிடையாது என்பதே உண்மை. மக்கள் எக்கேடும் கெட்டு போகட்டும், நாம் எஜமானர்களிற்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதியுடன் இருக்கின்றனர்.

தென்பகுதியில் நாட்டை கொள்ளையிடும் சுதந்திரக்கட்சியையும், ஜக்கிய தேசிய கட்சியையும் மாறி மாறி பதவியில் அமர்த்தி சாதாரண உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும், விடிவையும் காணாதது போல; வடக்கு - கிழக்கில் தேர்தல் காலங்களில் மேடை மேடையாக ஏறி தமிழ்த் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு போய், எந்த சிங்கள அரசு தமிழின எதிரி என்றார்களோ அவர்களிடம் அனைத்து சலுகைகளை, வசதிகளை பெற்று தம்மை மேம்படுத்துபவர்களிடம் மக்கள் தொடர்ந்தும் ஏமாறிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை அடைவு வைத்து தமது சொந்த வாழ்வை மேம்படுத்த யார் காலையும் நக்கக் கூடியவர்களாகவே அன்று தொட்டு இன்று வரை உள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. எனவே மக்கள் தமது போராட்டங்களில் இவர்களின் தலையீட்டுகளிற்கு எதிராக போராடுவதும், தமது நியாய பூர்வமான கோரிக்கைகளுக்காக விட்டுக் கொடுக்காத போராட்டங்களை நாடாத்துவதும், நாட்டிலுள்ள உழைக்கும் சிங்கள-முஸ்லீம்-மலையக மக்களின் போராட்டங்களுடன் தம்மை இணைத்துக் கொள்வதும் தான் இந்த கயவர்களிடம் இருந்து மீள்வதற்க்கான வழியாக அமையும்.