எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதோ, எந்த இனத்தவர் என்பதோ, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதோ, எது பெரும்பான்மை சிறுபான்மை என்பதோ, ஜனநாயகத்தின் அடிப்படை பிரச்சனையல்ல. மாறாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை என்பது, பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து என்னவிதமான முடிவையும், நடைமுறையையும் கொண்டிருக்கின்றது என்பதே, ஜனநாயகம் குறித்தான அடிப்படைக் கேள்வியாகும். எதிர்க்கட்சி தலைமை என்பது முழு இலங்கை மக்களின் குரலாக இருக்கவேண்டும் என்பது குறித்து, அக்கறைப்பட வேண்டும்.
இன்று அரசுக்கு எதிரான எதிர்க்கட்சியும் - தலைமையற்ற ஒரு புதிய நிலைமை தோன்றி இருக்கின்றது. இருக்கும் எதிர்க்கட்சித் தலைமை என்பது, குறுகிய இனவாதத்தைப் பேசுகின்றதும், தன் இனத்தையே ஒடுக்குகின்ற இன மேலாதிக்க சக்திகளையே பிரதிநிதித்துவம் செய்கின்ற, படுபிற்போக்கான மக்கள்விரோத அரசியலையும், நடைமுறையையம் கொண்டது.
நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம் சார்ந்த மக்களின் உடனடிப் பிரச்சனைகள்; அது சார்ந்த போராட்டங்கள் மீது எந்தச் சமூக அக்கறையுமற்றுக் கிடக்கின்றது. குறிப்பாக இனரீதியாக எடுத்தால், இந்திய ரோலர்கள் வடக்கு மீனவர்களின் மீன்பிடிவளத்தை அழிப்பதை எதிர்த்து வடக்கு மீனவர்களின் போராட்டம் குறித்தோ, வடக்கு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் குறித்தோ அக்கறைகொள்ளாத கட்சி, முழு மக்களுக்காக கடுகளவு கூட குரல் கொடுக்கப் போவதில்லை.
சொந்த "இன" மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டாது, வாக்குப் போடும் மந்தைகளாக தமிழ் மக்களை இழிவாக கையாளுவதையே பாராளுமன்ற ஜனநாயகமாகக் கருதும் அதேநேரம், யாழ் மேலாதிக்க சமூக அமைப்புமுறையை தங்கள் நடைமுறையாகக் கொண்டவர்கள் இவர்கள். இந்த வகையில் போராடும் மக்களை ஒடுக்குவதையே அரசுக்கு நிகரான வகையில் அரசியலாகக் கொண்டவர்கள்.
இன்றைய இவர்களின் எதிர்க்கட்சித் தலைமையிலான செயற்பாடானது, இலங்கை மக்களின் ஜனநாயகத்தை குழிபறிக்கின்றதும், நவதாராளமயத்தை முன்னெடுக்கும் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு துணை நிற்கின்றது என்றால் மிகையாகாது.
எதிர்க்கட்சி என்பதும் - பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை என்பதும், அரசுக்கு எதிராக போராடும் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து, அரசுக்கு எதிராக செயற்படுவதும் அதே வேளை சரியான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதுமாகும்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமையைப் பெற்றுள்ள கூட்டடைப்பு அப்படிப்பட்ட கட்சியல்ல. தமிழ் இனவாதக்கட்சியான கூட்டமைப்பு, சொந்த இன மக்களின் எதிர்க்குரல்களை ஒடுக்குகின்ற, அதற்காக குரல் கொடுக்க மறுக்கின்ற, தன் கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கின்ற, தனது கட்சிக் கூட்டணிக்குள் ஜனநாயகவிரோத முடிவுகளைத் திணிக்கின்ற, ஒரு ஜனநாயகவிரோத கட்சியாகும். அது இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமையை, அரசுடன் கூடிய ஒரு கூட்டுச்சதி மூலம் பெற்று அரசுக்கு சேவை செய்கின்றது.
பாராளுமன்றத்தில் உண்மையான ஜனநாயகத்தை முன்தள்ளும் எதிர்க்கட்சியாக, சிங்கள - முஸ்லிம் - மலையக - தமிழ் மக்களின் ஜனநாயக குரல்களையும், போராட்டங்களையும் ஆதரித்து பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கும் கட்சிக்குரிய குறைந்தபட்ச அருகதை கூட இக்கட்சிக்கு கிடையாது.
பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கும் எதிர்க்கட்சி பாத்திரத்தையே, கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தொடங்கி இருக்கின்றது. மக்களின் போராட்டம் பற்றிய குரல்கள் இனி பாராளுமன்றத்தில் இடம்பெறப் போவதில்லை என்பதையே பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு ஜனநாயகமாக்கி இருக்கின்றது.