எங்கடை பிரச்சனைகளைத் தீர்க்க, எங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம் என்பது உண்மையா? எங்கள் வாக்குகள் மூலம் தெரிவான பிரதிநிதிகள், பிரச்சனைகளைத் தீர்த்து இருக்கின்றனரா? எமது சுயமான தெரிவுகளுடன் தான் நாங்கள் வாக்கு போடுகின்றோம் என்றால், நாங்கள் பகுத்தறிவுபூர்வமாக இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
தேர்தலையே தங்கள் அரசியலாகக் கொண்ட அரசியல்வாதிகளும் - வியாபரத்தையே தங்கள் நோக்கமாகக் கொண்ட ஊடகங்களும் ஊடகவாதிகளும், மக்கள் மத்தியில் இன-மத வாதத்தைத் தூண்டி பிழைப்பதுமாக அரசியல் மாறி இருக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் பற்றி, அரசியல்வாதிகளும் - ஊடகங்களும் பேசுவதில்லை. ஏன் மக்களின் வாழ்க்கை பிரச்சனையை அரசியலாகக் கூட அணுகுவதில்லை.
இலங்கையில் அரசியலாகவும், தேர்தல் ஜனநாயகமாக இருப்பது இனவாதம். இது தமிழன் - சிங்களவன் - முஸ்லிம்கள் - மலையகத்தான் என்று பிரிக்கின்றது. இது தான் ஜனநாயகமாக இருக்கின்றது? மக்களை இன-மத ரீதியாக பிரித்து தங்கள் சொந்த பிழைப்புக்கு அரசியல் நடத்துகின்றவர்கள், இதை மக்களின் பிரச்சினையாக காட்டி வாக்கு கேட்பதும் நடந்து வருகின்றது.
இயல்பாக இணைந்து வாழும் பல் இன-மத மக்கள் மத்தியில், இன - மத முரண்பாட்டை போலியாக கட்டமைத்து முன்தள்ளும் இனமத பிரச்சாரங்களுக்குள், இலங்கை மக்களை பிரித்தாளுகின்ற எல்லைக்குள் வாக்கு கேட்பதும் - வளர்ப்பு மந்தைகள் போல் வாக்கு போடுவதும் நடந்தேறுகின்றது.
இலங்கை சமூகத்தில் இனமதம் கடந்து இணைந்து வாழும் மக்கள் வாக்கு போடும் போது, இன - மதவாதிகளாக மாறி வாக்கு போடுவதும், அதை நியாயப்படுத்த இன-மத-சாதி "பிரநிதித்துவம்" பற்றிய பேசுகின்ற அளவுக்கு, இனவாதம் தேர்தலில் முன்தள்ளப்படுகின்றது.
இன வாக்கு மூலம் வெற்றி பெறுகின்றவர்கள் அனைவரும் இனவாதிகளாக இருப்பதுடன், இனரீதியாக மக்களை பிரிந்து வாழும்மாறு கோருகின்றனர்.
ஆனால் எதார்த்தத்தில் இனம் கடந்து மக்கள் இணைந்து வாழ்வதே, அன்றாட வாழ்க்கை முறையாக இருகின்றது. யாரையும் யாரும் எதிரியாக அணுகுவதோ, வெறுப்பதோ கிடையாது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஒன்றாக பயணிப்பது என்பது மட்டும் தான் வாழ்க்கைகுரிய தீர்வாகவும், அன்றாட நடைமுறையாகவும் இருக்கின்றது.
இன ரீதியான வாக்களிப்பு என்பது, எமது அன்றாட வாழ்க்கை முறைக்கு முரணானது. சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை மூலமே, எதையும் தீர்க்க முடியும் என்பதே, வாழ்வின் எதர்த்தமாக இருக்கின்றது. இனரீதியான பிளவு என்பது அன்றாட வாழ்க்கை முறைக்கு முரணானதும், கற்பனையான அரசியலாகவும் இருக்கின்றது.
இன்று இனரீதியான வாக்களிப்பை மறுப்பதே, பகுத்தறிவு பூர்வமான சுயமுடிவாக இருக்க முடியும். இனவாதத்துக்கு எதிராக இன ஐக்கியத்தை கோரியும், அதேநேரம் மக்களின் அன்றாட பிரச்சினைகளை பேசும் கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமே சரியான சுய தேர்வாக இருக்க முடியும்.