ஜரோப்பிய ஒன்றியத்தினால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் யூரோ நாணயங்களை மீள கையளிக்க விதிக்கப்பட்ட காலக்கேடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. கடந்த இரு வாரங்களாக ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களிற்கும் கிரேக்க அரசுக்கும் இடையே நடந்த கடனுக்கான வட்டியினை திருப்பி கையளிப்பதற்க்கான பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி இறுக்க நிலையினை அடைந்துள்ளன.
ஜரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தின் மீது பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் காலக்கேடு பின்தள்ளப்படும் என அறிவித்து கிரேக்க அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
கடன் வழங்கிய ஜரோப்பிய ஒன்றிய மத்திய வங்கி மற்றும் ஜஎம்எவ் வங்கி நிறுவனங்கள் "சிக்கன பொருளாதாரத்தை" அமூல்ப்படுத்துமாறு கிரேக்க அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கின. இந்த சிக்க பொருளாதாரம் என்பது கிரேக்கத்தில் ஆழவேர் ஊன்றியுள்ள பல்தேசிய கம்பனிகளுக்கு குறைந்த வரி சலுகையினை வலியுத்தும் அதேவேளை சாதாரண மக்களின் சமூக நலத்திட்டங்களை மிகவும் குறைத்தும், கல்விக்கு கட்டணம் அறவிட்டும், மக்கள் மீது மென்மேலும் வரிகளை சுமத்தியும் சேமிககப்படும் பணத்தில் கடனை மீள செலுத்தும் படியும் வலியுறுத்துகின்றது.
ஜரோப்பிய ஒன்றியத்தின் இந்த நவதாராளவாத பொருளாதார சுரண்டலை அண்மையில் கிரேக்க மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ள சுரஸா அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து நிற்க்கின்றது. மேலும் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து புதிய ஒப்பந்தத்திற்கு போவதா இல்லையா என ஒரு பொதுசன வாக்கெடுப்பினை எதிர்வரும் 5ம் திகதி நிகழ்த்தவுள்ளது.
அரசியல் அவதானிகளின் கருத்துப்படி உலக கந்துவட்டிக்காரர்களான ஜரோப்பிய ஒன்றிய மற்றும் ஜஎம்எவ் வங்கி நிறுவனங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கொத்தடிமைகளாக இருப்பதனை விட, கிரேக்க மக்கள் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவதே சிறந்தது என தீர்ப்பு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரேக்கம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில் அதனை தொடர்ந்து மிகவும் நெருக்கடியான பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின், போலந்து மற்றும் இத்தாலி என்பனவும் வெளியேறக் கூடிய சாத்திப்பாடு நிறையவே காணப்படுகின்றது.
இன்றுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜரோப்பிய ஒன்றியம் நிலைகுலைந்து போகக் கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே காணப்படுகின்றது. முதலாளித்துவம் அதன் சொந்த நாடுகளிலேயே வீழ்ச்சி அடைந்து தோல்வியை தழுவும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதனை கிரேக்கத்தின் இன்றைய நெருக்கடி பறை சாற்றி நிற்க்கின்றது.
"போராட்டம்" இதழ் 19 இல் வெளிவந்த கிரேக்கம் பற்றிய கட்டுரை கீழே உங்கள் பார்வைக்கு
கிரேக்க இடதுசாரிய முன்னணி சுரிஷாவின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும்
ஐரோப்பிய இடதுசாரியமும், சுரிஷாவின் உருவாக்கமும்
சோவியத்தின் வீழ்ச்சியின் பின் ஐரோப்பாவில் இடதுசாரியம் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. ஏற்கனவே பல சீரழிவுகளாலும், தத்துவார்த்த முரண்பாடுகளாலும் பலமிழந்திருந்த இடதுசாரியம் 90 களின் நடுப்பகுதியில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முன்னேற முயன்றது. சுய விமர்சனங்கள், மார்க்சிஸ மறு ஆய்வுகள்- தத்துவார்த்த விமர்சனங்கள், புதிய செயற்தந்திரங்கள்- குறிப்பாக அதிகாரமும் - ஜனநாயகமும் பற்றிய புதிய வேலைமுறைகளை இடதுசாரிகள் விவாதித்தனர். இவ் விவாதங்கள் சில நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இடதுசாரிய அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டது.
டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், கிரீஸ் போன்ற நாடுகளில் புதிய இடதுசாரியக் கட்சிகள் உருவாயின. இவை வழக்கமான இடதுசாரியக் கட்சிகள் போல் அல்லாமல் - சோசலிசம் பற்றிய பலவிதமான கொள்கைகளைக் கொண்ட- மாவோயிசக் கட்சிகள் தொடக்கம் ட்ரொட்ஸ்கியக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளும், வெகுசன அமைப்புகளும் இதில் பங்குகொண்டன. இதில் பங்குகொண்ட கட்சிகள் தமக்கு இடையிலான கருத்து வித்தியாசங்களை விவாதித்தபடி மக்கள் தேவைகளின் அடிப்படையில், சமூக போராட்டத்தை- மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கங்களாகவே இப்புதிய இடதுசாரியக் கட்சிகள் உருவாக்கப்பட்டன. அத்துடன் தேர்தலிலும் பங்குகொள்வதற்கான தேர்தல் முன்னணியாகவும் உபயோகிக்கப்பட்டது.
இவற்றில் முதன் முதலில் மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத் தேர்தல்களிலும் அரசியல் ரீதியான வெற்றியைக் கண்டது (1994) டென்மார்க்கின் இடதுசாரிய முன்னணியான Enhedslisten – De Rød-Grønne (Unity List – The Red–Greens) என்ற கட்சியாகும். இன்றும் ஆளும் வர்க்கத்துக்கு - அதன் நவதாராள பொருளாதார அரசியலுக்கு எதிரான சக்தி வாய்ந்த கட்சியாக விளங்குகிறது Enhedslisten – De Rød--Grønne.
டென்மார்க் இடதுசாரிய அரசியலில் சிறு வளர்ச்சி ஏற்பட்டுப் பத்து வருடங்களின் பின் 2004 ல் கிரீஸ் நாட்டில் இடதுசாரிகளுக்கு இடையிலான கூட்டு உருவானது. கிரீசின் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் அகங்காரவாத அரசியல், நவதாராளமய பொருளாதாரவாத நெருக்கடி இவற்றிற்கு எதிராக கிரீஸ் மக்கள் கிளர்ந்தெழுந்தமை போன்ற மூன்று முக்கிய விடயங்கள் இடதுசாரிகளின் கூட்டை கிரீசில் உருவாகக் காரணமாகியது.
Synaspismós Rizospastikís Aristerás(SYRIZA ) / Coalition of the Radical Left என்று அழைக்கப்படும் இந்த இடதுசாரிகளின் கூட்டமைப்பானது, பல இடதுசாரிய கட்சிகள், மக்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்களின் தேர்தல் கூட்டமைப்பாக மட்டுமல்லாமல் மக்கள் போராட்டத்தை தலைமை தங்கும் முன்னிலைச் சக்தியாகவும் இயங்குகிறது.
2004 பாராளுமன்றத் தேர்தலில் (241.539 வாக்குகள்) 3.3 வீத வாக்குகளைப் பெற்று 6 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய SYRIZA 2012 இல் (1.655.053 வாக்குகள்) 26.9 வீத வாக்குகளைப் பெற்று 71 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.
2015 தேர்தல்
கிரேக்க இடதுசாரிக் கட்சிகளின் கூட்டான SYRIZA, கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் 25.01.2015 அன்று 149 ஆசனங்களை வென்று பாரிய வெற்றியடைந்தது. 25.01.2015 அன்று ஆறு மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே SYRIZA பாரிய வெற்றியடையும் எனக் கூறப்பட்டது.
அதன்படியே, தேர்தலில் வென்றுள்ள SYRIZA (25.01.2015, இரவு வரை) 36.30 வீதமான வாக்குகளை பெற்றது. 50 வீதமான வாக்குகளை SYRIZA பெறாவிட்டாலும், 300 ஆசனங்களைக் கொண்ட கிரேக்க பாராளுமன்றத்தில், கிரேக்க விகிதாசார தேர்தல் சட்டப்படி 50 வீதத்துக்கும் மேலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன் அடிப்படையில், ஆளும் கட்சியாகவிருந்த புதிய ஜனநாயகம் என்ற நவதாராள பழமைவாதக் கட்சியின் தலைமையிலான அரசு தேர்தல் இரவு அன்று பதவி விலகியது. அதன் பிரதம மந்திரி அந்தோனியோ சமராஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு, SYRIZA வின் பிரதமர் வேட்பாளர் அலெக்சிஸ் சீபிராஸ் - Alexis Tsipras அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
வலதுசாரிகளுடன் அரசு அமைத்தமை
தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள போதும் SYRIZA தனித்து கிரேக்கத்தில் ஆட்சி அமைக்காமல், "சுதந்திர கிரீக்கர்கள்" என்ற வலதுசாரிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஒரு இடதுசாரிக் கூட்டணி, வலதுசாரியக் கட்சியை தனது அரசு அமைக்கும் பங்காளியாக மாற்றியது, இடதுசாரிகளை மட்டுமல்ல பரந்துபட்ட அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதுவும், சுரிஷாவின் கொள்கைக்கும் இடதுசாரிய அரசியலுக்கும் மிகவும் இணைவான கட்சிகளான கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சிகள் இருக்கக் கூடியதாக, அது வலதுசாரியக் கட்சியொன்றை ஆட்சியின் பங்காளியாக தெரிவு செய்தது ஆச்சரியப்படத்தக்க விடயமே. இவ்விடயம் பற்றி சுரிஷாவின் தலைமை கூறும் கருத்தும் மிக முக்கியமானதாகும்.
இன்று கிரேக்க நாடும் அதன் அரசும் எதிர்நோக்கும் பிரச்சனை அல்லது முதன்மை முரண்பாடு உள்நாட்டு அரசியல் சார்ந்ததல்ல. மாறாக ஐரோப்பிய யூனியன், அதன் மத்திய வங்கி மற்றும் ஐ. எம். எப் என்ற சர்வேதேச நாணய நிதியம் என்ற அந்நிய மூலதனம் சார்ந்த நிறுவனங்கள், கிரேக்கத்தின் தேசியப் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் கிரேக்க தேசத்தின் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் மறுப்பதே முக்கிய பிரச்சனையாக- முரண்பாடாகவுள்ளது. இதன் அடிப்படையில் இன்று உள்நாட்டு முரண்பாடுகளை ஒருபக்கம் வைத்து விட்டு, பொது எதிரிகளான அந்நிய சக்திகளை வெல்வதற்காகவே, SYRIZA வலதுசாரிய கட்சியான "சுதந்திர கிரீக்கர்கள்" உடன் சேர்ந்து, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான ஒருவகை தேசபக்த - தேசிய அரசை அமைத்துள்ளது.
சீனாவின் தேசபத்த யுத்தம், சோவியத்தின் பாசிசத்துக்கு எதிரான போர் போன்ற வரலாற்று நிகழ்வுகளில், எவ்வாறு ஐக்கிய முன்னணிகள் தந்திரோபாய அடிப்படையில் கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்டதோ அதேபோன்ற நிகழ்வே கிரேக்கத்திலும் சுரிஷாவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுரிஷா அரசும் கிரேக்க மக்களின் எதிர்பார்ப்பும்
சுரிஷாவின் வெற்றியும், அது அரச அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ஐரோப்பிய அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்த இருபது வருடங்களாக கிரேக்க மக்கள் பாரிய பொருளாதாரச் சிக்கல்களுக்குள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சுரிஷா அரசு தமது பொருளாதாரச் சுமையை ஓரளவுக்கேனும் குறைக்குமென்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர் .
குறிப்பாக கீழ்வரும் ஆறு விடயங்களுகும் சுரிஸா அரசால் தீர்வு காணப்படல் வேண்டுமென கிரேக்க மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
1. அரசால் வரையறுக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம்
2. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற "கருவறையில் தொடக்கி -கல்லறை வரையிலான" சேவை வழங்கும் மக்கள் நல அரசு
3. தரமான இலவச சுகாதாரம் மற்றும் உயர்கல்வி
4. விலைவாசி மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய வயோதிபகாலப் (பென்சன்) ஓய்வூதியம்
5. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மானியங்களும் கொடுப்பனவுகளும்.
6. வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்
இவ் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்றால், சுரிஸாவிடம் தோற்றுப்போன "புதிய ஜனநாயகம்" என்ற நவதாராள பழமைவாதக் கட்சியின் தலைமையிலான அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட "சிக்கனப் பொருளாதாரம்" இல்லாதொழிக்கப்படல் வேண்டும். இந்த "சிக்கனப் பொருளாதாரம்" மேற்படி புதிய ஜனநாயக கட்சியின் அரசால் சுயமாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல. கிரீஸ் பாரிய வெளிநாட்டுக் கடன் சுமையால் பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ளது. கிரேக்கம் 240 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம், அதன் மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய மூன்று நிறுவனங்களிடமும் கடனாகப் பெற்றுள்ளது. இக்கடன் சுமையானது கடந்த 10 வருடங்களாக, கிரேக்கத்தின் தேசியப் பொருளாதாரத்தின் வருவாய் மூலம் தீர்க்ககூடிய தொகை அல்ல. அதனால் மேற்படி மூன்று அந்நிய சக்திகளும், தமது கடனைத் திரும்பப் பெறும் நோக்கில் "புதிய ஜனநாயகம்" என்ற நவதாராள பழமைவாதக் கட்சியின் அரசை வற்புறுத்தி உருவாக்கியதே "சிக்கனப் பொருளாதாரம்" "சிக்கனப் பொருளாதாரம்" முறைமையின் உள்ளடக்கம் என்னவெனில்
1.தேசிய சொத்துக்களை தனியார் மயப்படுத்தல்
2. அதேபோன்று உயர்கல்வி, சுகாதாரம், பென்சன் போன்ற அரச சேவைகளை தனியார் மயப்படுத்தல்
3. மானியங்கள், பென்சன் மற்றும் பல மக்கள்நல உதவித் தொகைகளை இல்லாதொழித்தல் அல்லது 50 வீதமாகக் குறைத்தல்
4. எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி வெளிநாட்டு மூலதனம், தேசியப் பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு வகை செய்தல்.
அதாவது, நவதாராளப் பொருளாதாரத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துதலே "சிக்கனப் பொருளாதார" முறைமையாகும். இங்கு சிக்கனம் என்பது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் மட்டுமே என்பதும், முதலாளித்துவ - ஏகாதிபத்திய சுரண்டலுக்காக என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இதன் பின்னணியில், சுரிஸா அரசானது எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம், அதன் மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கிரேக்கம் மீதான பொருளாதார ஆதிக்கத்தை கையாளப் போகின்றது என்பதிலேயே அதன் வெற்றியும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். இதைத் தன்னால் தீர்க்க முடியும். புதிய பொருளாதார அடிப்படையில் - மக்கள் நல அரசை அமைக்க முடியும் - அமைப்போம் என்ற கோசத்தை முன்னிறுத்தியே SYRIZA இந்த தேர்தலில் வென்றுள்ளது.