எமது நாட்டின் வருமானத்தில் ஏகப்பெரும்பான்மையான வருவாயைப் பெற்றுத்தரும் மலையக மக்கள் இன்றும் தோட்டத் தொழிலாளர்களாகவே நாட்கூலி சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். இவர்களுக்கான கல்வி சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகள் யாவும் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட மிகவும் கீழ் மட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.
சுகாதார வசதிகள் வாழ்வதற்குத் தகுதியற்ற முறையில் காணப்படுவதோடு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை மாத்திரமன்றி, குடும்ப உறவுகளைக் கூட நெருக்கடிக்குள் தள்ளும் 'லைன் காம்பரா" எனும் குடியிருப்பு வாழ்வியல் முறை மிகமிக அபத்தமானது. சமகால நிலையில் மலையக மக்களின் வறுமை 32வீதம் ஆகும். இது முழு இலங்கையினதும் வறுமை வீதத்தில் 15.2 ற்கும் குறைவாக உள்ளது. அத்தோடு சத்தான உணவு, தேவையான அளவு கலோரிகள் இன்றி அந்த மக்கள் ஆரோக்கியமற்றவர்களாகவே வாழ்கின்றனர். இதில் பெண்களின் ஆரோக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் மரணிக்கும் குழந்தைகளின் விகிதாசாரம் நாட்டில் பொதுவாக ஆயிரத்துக்கு 13.9 ஆக இருக்கும் போது, மலையக மக்களைப் பொறுத்தவரை விகிதாசாரம் 31 ஆக இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் மரண விகிதாசாரம் ஆயிரத்துக்கு 51.6 வீதமாகும்.
மலையகத்தில் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குன்றல் நகர்ப்புற பிள்ளைகளை விட மூன்றுமடங்காகும். இன்று மலையக மக்கள் தோட்ட வைத்தியசாலையை நம்பி இருக்கின்ற நிலையில் இவைகளின் சேவை மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன.
1970 களின் பின்னர் படிப்படியாக அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட தோட்டப் பாடசாலைகளின் கல்வித்தரம் மற்றும் வளங்கள் விநியோகம் நாட்டின் தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது.
இதில் பாடசாலை இடைவிலகல் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 5ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளின் விகிதாசாரம் 8.4 வீதமாகவுள்ளது. கிராமம் மற்றும் நகரத்தைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார சுகாதார நிலைமைகளிலேயே மலையகமக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆசியாவில் உன்னதமான ஜனநாயக வாழ்வு எம்நாட்டில் தானென, மகிந்த குடும்ப அரசு புளகாங்கிதம் அடைகிறது.
இதற்கு ஆமாம் என சுகபோக வாழ்வு வாழும் மலையக மக்கள் விரோதத் தலைமைகளும் தஞ்சாவ+ர் பொம்மைகள் ஆடுவது போல் தலை ஆட்டுகின்றன. ஆனால் எம்நாட்டு மக்களின் சகல வாழ்வும் இப்படித்தானென மலையக மக்களின் வாழ்வாதாரத்தரம் முன்னுதாரணம் காட்டுகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். தரமான வாழ்வாதாரத்திற்கு மலையக மக்கள் வாழ்வு ஒரு சோற்றுப்பதமாக உள்ளது.