இலங்கையில் தமிழ்மக்களின் வாழ்க்கையினை போருக்கு முன் போருக்குப் பின் என்ற நிலை கொண்டு பார்க்க வேண்டியது இன்று அவசியமாகின்றது. இந்த போர் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையினை பல இன்னல்களையும், இழப்புக்களையும், விரக்திகளையும் கொண்டதாக மாற்றியுள்ளது. மக்களால் தொலைக்கப்பட்டவை ஏராளம், அவற்றினை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.
ஆனால் போரின் போது அரசினால் மக்களிடம் பறிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட பெரும்பான்மையான நிலங்கள் அந்த மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. பலாலி இராணுவ முகாமினை அண்டிய பல கிராமத்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அது பாரிய இராணுவம் குடிகொண்ட பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு மீள முடியாமல் தவிக்கிறார்கள். இந்த மக்களின் துயரமும் கண்ணீரும் பாசிச அரசின் இராணுவ அடக்கு முறைக்குள் அமிழ்த்தப்பட்டு யாருடைய ஆதரவும் இல்லாத தவிப்பாக உள்ளது.
இதே போன்று வன்னியிலும் சரி கிழக்குப் பகுதிகளும் சரி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்த நிலையிலேயே உள்ளார்கள். இவர்களுடைய காணிகளை அபகரித்த அரசு, அதில் இராணுவத்தை குடியேற்றுவதிலும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதிலுமே முனைப்பாகவுள்ளது.
போருக்குப் பின் இப்படி ஓரு அவல நிலைக்கு மாற்றப்பட்டுள்ள மக்களுடைய வாழ்க்கை நியாயங்கள் மறுக்கப்பட்டு எந்த ஆதரவுமற்ற நிலையில் நிர்க்கதியாகவுள்ளது. இன்று தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு பகுதியினர் பிரச்சனை அவர்களின் வதிவிடமாகும். இந்த மக்கள் இராணுவத்துடனோ, அரசுடனோ வாதிட முடியாத பலமற்ற மனிதர்களாக உள்ளார்கள். இன்று பல வழிகளிலும் ஆதரவற்று அல்லற்படும் இந்த மக்கள் தங்களுடைய அரசின் மீதான ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் காட்ட மாற்று அரசியலாளர்கள் இல்லாத நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களே இன்று மாகாணசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டியுள்ள கூட்டமைப்பு அரசியல்வாதிகளாகும். இன்று இந்த மக்களுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த அரசியல்வாதிகளுக்கு உண்டு. மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து முறியடித்து மக்களை சகல சமூகப் பிரச்சனைகளிலுமிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இவர்களுடையதே.
இதனை இவர்கள் செய்யமாட்டார்கள் என்பது எந்தவிதமான சந்தேகங்களிற்கும் இடமற்ற உண்மை. ஏனெனில் இவர்கள் தேர்தலில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு நீதி விசாரணை குறித்தோ சரணடைந்த போராளிகளின் விடுதலையினையோ ஆகக் குறைந்த பட்சம் அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து அறிவது குறித்தோ திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் குறித்தோ நில அபகரிப்புக்கள் குறித்தோ அன்றி வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்புக் குறித்தோ வாய் திறக்கவே இல்லை.
மாறாக தமது வெற்றிக்காக பிரபாகரனையும் மறைந்த போராளிகளின் தியாகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர். வெற்றிக்கு பின்னர் இந்திய, இலங்கை அரசுகளின் நலன்களிற்கு அமைவாக காய்நகர்த்தலில் ஈடுபடுவதுடன் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட முன்னைநாள் போராளிகளை ஒதுக்க ஆரம்பித்துள்ளது இந்த கூட்டமைப்பு. தேர்தல் வெற்றிக்கு பின்னர் சில அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகவே இருக்கின்றது. இந்த அரசியல்வாதிகள் மொத்தத்தில் தங்களுடைய சுயநலத்திற்காக, சீமான் போன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பாணியில் தமிழ் இனவாதிகளாகவே இயங்குகின்றார்கள்.
இவர்களுடைய நடவடிக்கை முற்றிலும் தங்களுடைய சுயநல அரசியல் இலாபம் கொண்டதேயொழிய, தமிழ்மக்களுடைய எதிர்பார்ப்புமல்ல அந்த மக்களுடைய நலன் சார்ந்ததுமல்ல. மக்களை மந்தைகளாக கருதும் இந்த சுரண்டல் அரசியல்வாதிகள் இப்போது 60வதுகளின் எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியிலேயே மக்களை அணுகுகின்றார்கள்.
இதற்கு மிகுந்த உதாரணம் நாவற்குழிக் கிராமத்தில் எம்.பி சிறீதரன் மேற்கொண்ட நடவடிக்கை. இந்த தமிழ் அரசியல்வாதி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து சரளமாகத் தமிழ்மொழி பேசும் சிங்கள பெண்மணியிடம் கட்டப்பொம்மன் வசனங்கள் பேசுகின்றார். சிங்கள இனவாத அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் குறித்து மக்களை அணிதிரட்டி அரசிற்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுப்பதனை விட்டு விட்டு நேர்மையற்ற இந்த அரசியல்வாதி, அடியாட்களோடு சென்று அந்த சாதாரண சிங்கள குடும்பத்தினை மிரட்டுகின்றார். 'அரசு பலவழிகளில் மக்களை அடக்கியொடுக்குகின்றது.., மக்களின் நிலங்களை அபகரிக்கின்றது, அதை வெளிநாடுகளுக்கு தாரைவார்கிறது.., இடம் பெயர்ந்த மக்களை குடியமர்த்த மறுக்கின்றது..," இப்படி பலவழிகளில் மக்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்த்து வாதிட முடியாத இந்த அரசியல்வாதி ஒரு அப்பாவிப் பெண்ணிடம் தனது வீரத்தினை காட்டுகின்றார்.
அந்தப் பெண் பேசும் தமிழ் மொழி ஒன்றே போதும் அந்தப் பெண்ணின் நியாயங்களை நிரூபிக்கவும், அவர்கள் எவ்வளவு காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டவும். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களும், சிங்கள மக்களின் பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து வாழ்வது காலங்காலமாக நடந்து வரும் ஒரு செயற்பாடாகும். இரண்டு இனமக்களும் இணைந்து வாழ்வதும், குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதும் வழமையானது. இந்த மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளை உருவாக்கி அவர்களை மோதவிட்டு அதில் தாங்கள் அரசியற் குளிர்காய்வது தான் இந்த சிறீதரன் போன்ற தமிழ் - சிங்கள இனவாதிகளின் தேவையாகும். மகிந்தா –கோத்தாவினால் வள்ர்க்கப்பட்டு வருகின்ற பொதுபலசேனா, சிங்களராவய இராவணபல போன்ற இனவாத மதவாத அமைப்புக்களும் சிறீதரனும் மக்கள் மத்தியில் இனவாத மதவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த நெருப்பில் குளிர்காயும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள மக்கள் மத்தியில் மாற்று அரசியல் பார்வை வரக் கூடாது என்பதற்க்காக அங்கு இனவாதம் மதவாதம் படுபயங்கரமாக கட்டிக்காக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற தமிழ் தரகு முதலாளிகள் தங்களுடைய சொந்த பொருளாதார நோக்கங்களிற்க்காக இனவாதம் பேசுகின்றனர். அப்பாவி மக்களை மிரட்டும் இவர்கள் வடக்கில் பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் சிங்கள முதலாளிகளுடன் மோதுவது கிடையாது. மீளகுடியேறியுள்ள முஸ்லீம் மக்கள் குறித்து அக்கறை கொண்டது கிடையாது.
ஒரு கதைக்கு நாளை மாநில சுயாட்சியோ அன்றி தனியான நிர்வாக அலகோ தமிழ் மக்களிற்கு கிடைக்கப்பெறுமானால் தமிழ் பகுதிகளில் வசிக்கின்ற முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் குறித்து இவர்களின் நிலைப்பாடு கடந்த காலத்தில் இயக்கம் செய்தது போன்று அவர்களை வெளியேற்றி துரத்தி விடுவதுதானா?
இலங்கையிலே சகல மக்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் - நிம்மதியாகவும் இருக்க வேண்டுமாயின், முதலில் இந்த தமிழ், சிங்கள இனவாதிகளை எமது மண்ணில் இருந்து களைந்தெடுக்க வேண்டும். இவர்களை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும். மக்களை மந்தைகளாக்க நினைக்கும் இவர்களை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த வேண்டியது இலங்கையில் வாழும் சகல இனமக்களுடைய கடமையாகும். இன்னொரு அழிவைத் தடுப்பது மக்களாகிய எங்கள் கையிற் தான் உள்ளது.