மௌனம் கலையும் போராட்டம்!
நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலங்களை கடந்தும் முன் கொண்டு செல்லப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக பல போராட்டங்கள் உள் நாட்டிலும், உலக அளவிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக பல எதிர்ப்பு குரல்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி நடந்த பல போராட்டங்களை நடத்திய இயக்கங்களின் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். உண்மையில் சொல்லப் போனால் காணாமல் போக செய்யப்பட்டனர்.
இனம், மொழி, மதம் என வேறுபாடின்றி எதிர்ப்பு குரல் எழுப்பியவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டனர். போராட்டங்களை மழுங்கடிக்க செய்வதே இதன் நோக்கம். இடையிடையே அரசியல் எதிரிகளும் பயங்கரவாத சாயம் பூசப்பட்டு கடத்தப்பட்டனர். காணாமல் போனவர்கள் தொடர்பாக பதில் கூறுமாறு வலியுறுத்தி போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. தொய்வு நிலையிலிருந்த போராட்டங்கள் நவிபிள்ளையின் வருகையுடன் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த காலகட்டத்திலே தான் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் போராட்டம் இதழும் மீண்டும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றது. பத்திரிக்கை வெளியிட வேண்டும் என்ற காரணத்திற்காக வெளியிடப்படாமல் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தின் பேரில், உழைக்கும் மக்களின் போராட்டத்தில் கருத்தியியல் தாக்கங்களை செலுத்த வேண்டியதின் பேரில் தேவையின் காரணமாக, அழுத்தம் காரணமாக வெளிகொணரப்பட்டதே போராட்டம் இதழாகும். எமது பணியில் எம்மை திடமாக திடப்படுத்தி கொள்ளவும் சுயவிமர்சனப்படுத்தி சரியான பாதையை உறுதிப்படுத்தவும் ஒரு சிறிய இடைவெளியை காலத்தின் கட்டாயம் கருதி கடக்க வேண்டிய தேவையை கடந்து மீண்டும் போராட்டத்தை எம் உறவுகளின் உருக்கமான போராட்டம் மௌனம் கலையும் நேரத்தில் நாமும் மௌனம் கலைந்திருக்கின்றோம்.
ஒடுக்குமுறை இருக்கும் வரை மக்கள் போராட்டங்கள் ஓய்ந்திடாது. அது வரை போராட்டத்தின் குரலும் ஓய்ந்திடாது.