25
Tue, Jun

மக்கள் போராட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைட்டம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான புரோமெட்ரிக் இனால் இந்திய மத்திய அரசின் உறுதுணையுடன், பரீட்சைக் கட்டணங்களினூடாக இலாபமீட்டும் நோக்கத்துடன் இந் நீட் பரீட்சை நடத்தப்படுகிறது. எனவே, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அனித்தா போன்ற ஆற்றலும் அறிவும் நிறைந்த ஏழை மாணவர்களின் கல்விக் கனவில் மண்போடும் இந்திய மத்திய அரசின் இக் கொடுஞ்செயலை எதிர்க்கவேண்டியது அவசியம். ஏனெனில், இலங்கையில் வேகமாகக் கல்வியைத் தனியார் மயப்படுத்தி வருவதால் அனித்தாவின் நிலை நாளை நமது பிள்ளைகளுக்கும் ஏற்படலாம். எனவும்,

மேலும் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும் லங்கேஸ் பத்திரிகே என்ற பத்திரிகையினை வெளியிட்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளருமான கௌரி லங்கேஸ் கடந்த 05 ஆம் திகதி பி.ப. 7.30 மணி அளவில் அவரின் வீட்டு வாசலில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூடப் பழக்க வழக்கங்களை எதிர்ப்பதிலும், சமூக அநீதிகளை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்டப் போராடுவதிலும், அடக்கி ஒடுக்கப்படும் தலித்துக்கள், பழங்குடி மக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதிலும், மதவெறிச் செயற்பாடுகளைக் கண்டித்துக் குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்றவர். ஆட்சியாளர்களின் தவறுகளை எவ்வித அச்சமுமின்றி எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தி வந்தவர். இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் விரோத மதவெறிச் சக்திகள், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், அதை வெளியிடுபவர்களை படுகொலை செய்வதன் மூலம் தமது சமூக விரோதச் செயற்பாடுகளை மறைக்க முயல்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் அண்மையில் எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரைத் தொடர்ந்து கௌரி லங்கேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவும் குற்றவாளிகள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்படவும் வேண்டும். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தி துண்டுப் பிரசுரத்தை பெரிதாக்கி பார்க்கலாம்