25
Tue, Jun

இதழ் 22
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற கட்சிகளிடமும் இருக்கின்ற அரசியல் ஒன்று தான். தமது பிழைப்பிற்க்காக தேவைப்படுகின்ற போதெல்லாம் கையில் எடுப்பது இனவாதம், மதவாதம். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்களை இன-மத ரீதியில் பிளவுபடுத்தியும், பொய் வாக்குறுதிகளை கூறியும், லஞ்சமாக பல பொருட்களை வழங்கியும் பாராளுமன்ற அரியணையினை கைப்பற்றுவதற்காக பகிரங்க பிராயத்தனங்கள் நடைபெறுவதனை காண்கின்றோம். இவர்கள் யாரிடமும் மக்களின் பொருளாதார பிரச்சினை முதல் தேசிய இனப்பிரச்சினை வரை தீர்வுகள் கிடையாது.

கடந்த 67 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்து வந்தவர்கள் தொடங்கி இவர்களுடன் இணைந்து நின்ற இடதுசாரிகள் வரை, இதனை நாம் கண்டு வருகின்றோம். இன ரீதியான தமிழ், முஸ்லீம் கட்சிகள் வரை இதற்கு விதிவிலக்கு கிடையாது.

இவாகளின் ஆதரவுடன் 2009 ஆண்டிற்கு பின்னர் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்ற நவதாராளவாத பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக எமது நாட்டில்

1. இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கு வேட்டு வைக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

2. பல்தேசிய கம்பனிகளால் மக்களின் சுற்று சூழல் மாசடைவதல் குடிநீர் நச்சுத்தன்மை ஊட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

3. மக்களின் சொந்த வாழ்வு நிலங்கள் பல்தேசிய கம்பனிகளின் தேவைகளுக்காக வலுக்கட்டாயமாக பறித்தெடுக்கப்படுகின்றன.

4. தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

5. விசாயிகளின் அனைத்து விதைகளின் உரிமம் மறுக்கப்பட்டு பல்தேசிய கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

6.தமது உரிமைகளிற்க்காக மக்கள் வீதிகளில் இறங்கினால் அரச ஆயுதபடைகள் மூலம் போராட்டம் ஒடுக்கப்படுகின்றது.

உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக கடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் உருவான முன்னிலை சோசலிச கட்சி தொடர்ச்சியாக நவதாரமய பொருளாதாரத்தின் அபாயத்தை மக்களிடம் பிரச்சாரப்படுத்தி வருவதுடன், மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை உயிர் இழப்புகளுடன் முன்னெடுத்து வருகின்றது.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளின் விவகாரத்தை தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் தேவைக்காக பேரம்பேச மட்டுமே பயன்படுத்தி வருகின்ற வேளையில், முன்னிலை சோசலிச கட்சி வெகுசன அமைப்பான சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து தெற்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம், இதனை சர்வதேச மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பேருவளையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது அரச குண்டர்களால் இனவாதத் தாக்குதக்குள்ளாகிய போது, சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை, கொழும்பில் நடாத்தியது.

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக சுயாட்சியை தீர்வாக முன்வைத்து, இனவாதத்துக்கு எதிராக இன ஜக்கியத்தினை வலியுறுத்தி பெரும்பான்மை இன மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி முன்னிலை சோசலிச கட்சி.

முன்னிலை சோசலிச கட்சியானது உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த எத்தகைய தியாகங்களையும் செய்யக் கூடிய ஒரு கட்சியாகவே உருவான காலம் முதல் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

மாறி மாறி முகத்தை மாற்றி ஆட்சி புரிந்தவர்கள் எவரும் இந்த நாடடின் பிரச்சனைகள் எதனையும் தீர்த்துள்ளார்களா? மாறாக தாம் பொருளாதார ரீதியாக கொழுத்துள்ளதுடன் அந்நிய நாடுகள் நாட்டின் வளங்களை சூறையாட வழி திறந்து விட்டுள்ளது தெளிவானது.

அன்று குடும்பம் - இன்று கூட்டு - நாடோ குழப்பத்தில். எனவே முகமாற்றம் போதும் அமைப்பு மாற்றத்திற்கு தயாராவோம்.

மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தனது கொள்கையாகக் கொண்டு போராடும் ஒரு இடதுசாரிய கட்சியினை வளர்த்தெடுக்க, முன்னிலை சோசலிசக் கட்சிக்கு வாக்களிப்பது மக்களை நேசிக்கின்ற அனைவரதும் இன்றைய கடமையாகும்.