25
Tue, Jun

இதழ் 18
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

இடதுசாரி முன்னணிக்கு வாக்களித்த இந்த மக்கள் தான், இலங்கை மக்களை நேசிக்கின்ற உண்மையான சக்திகளாக தங்களை முன்னிறுத்தி இருக்கின்றனர். நாளைய வரலாற்றை தங்கள் கையில் எடுப்பதன் மூலம், நடைமுறையில் பயணிக்கும் பாதையை தேர்தல் மூலமும் முன்வைக்கும் வண்ணம் வாக்களித்து இருக்கின்றனர்.

இலங்கையில் சிங்கள - தமிழ்- முஸ்லிம் இனவாதத்தில் இருந்தும், வர்க்க அரசியலற்ற 'இடதுசாரிய" போலிப்போக்கில் இருந்தும் விடுபட்ட ஒரு புரட்சிகர சக்திகளின் தோற்றமானது, ஒரு இரு வருடங்களையே தனது வரலாறாகக் கொண்டது. இலங்கையில் அனைத்து இனவாதத்துக்கும் எதிராகவும், வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுக்கும் கட்சி அரசியல் தோற்றத்துடன், இந்த தேர்தலையும் எதிர்கொண்டதானது வரலாற்றுக்கு முன் புதிரும் சவால் மிக்கதும் என்பது மிகையாகாது. இதன் போது சிங்கள - தமிழ் - முஸ்லிம் பாகுபாடின்றி ஒரே அணியில் நின்றது அதைவிடச் சிறப்பாகும்.

இடது முன்னணிக்கு எதிரான அவதூறுகள், இட்டுக்கட்டல்கள் ஒருபுறம் மறுபக்கம் தன் துண்டுப்பிரசுரத்தைக் கூட வெளியிட பணம் இல்லாத அமைப்பாக பாட்டாளி வர்க்கம் இந்த தேர்தலை பல்வேறு சவாலுக்கு இடையில் எதிர்கொண்டு தன் அணியை உறுதி செய்து கொண்டது. இடதுசாரி முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் மற்றையவர்களுக்கு கிடைத்ததில் இருந்து வேறுபட்டது.

அதாவது வர்க்க அடிப்படையில் கிடைத்த வாக்குகள். தாங்கள் ஏன் எதற்கு வாக்களிக்கின்றோம் என்ற குறைந்தபட்ச அரசியல் தெளிவுடன் வாக்களித்தவர்களே.

தங்கள் வர்க்கத்தை நேசிக்கின்ற, அவர்களின் விடுதலை குறித்த அக்கறையுடன் பயணிக்கின்ற ஒரு அரசியல் தெரிவாகும்.

வர்க்க அடிப்படையிலான இந்தத் தோதலில், எமது வெற்றி தான் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியுமாகும். பாட்டாளி வர்க்கம் தன்னை வர்க்கமாக இந்தத் தேர்தலில் ஒருங்கிணைத்துக் கொண்டதே இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியாகும்.