25
Tue, Jun

இதழ் 18
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.

மேற்கில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்களை இந்த வன்முறை மூலம் எதிரியாக இட்டுக் காட்டுகின்ற பிரச்சாரங்கள் மூலம், ஏகாதிபத்திய கொள்கைகளையும், மூலத்தின் சூறையாடலையும் இலகுவாக்குவதற்கே இந்த வன்முறை உதவுகின்றது.

முன்னாள் கம்யூனிச நாடுகளில் முதலாளித்துவதை மீட்டு அதிகாரத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், மக்களுக்கு ஒரு எதிரியைக் காட்ட இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் ஏகாதிபத்தியங்களே. 1970 களில் ஆப்கானிஸ்தானில் தொடங்கியவர்கள் இன்று ஈராக், லிபியா, சிரியா வரை, ஏகாதிபத்திய தலையீடுகளை நடத்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள். ஆயுதம்- நிதிகளை வழங்கியதன் மூலம் உலக பயங்கரவாதத்தை தோற்றுவித்தவர்கள், இந்த ஏகாதிபத்தியங்கள் தான்.

ஏகாதிபத்திய பொருளாதாரத்தை உலகமயமாக்கவும், ஏகாதிபத்திய முரண்பாடுகளை இராணுவ மேலாதிக்கம் மூலம் ஆதிக்கம் செலுத்தவும், தேர்தல் "ஜனநாயகத்தை" முன்வைத்து அரசுகளை கவிழ்க்கும் சதிகளின் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல, பயங்கரவாதம் பற்றிப் பேசுகின்ற ஏகாதிபத்தியங்கள் தான். அதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த ஊடகங்களும் தான்.

நாடுகளின் இறைமையையும், மக்களின் இறைமையையும் அழித்து விடும் வண்ணம், பயங்கரவாதத்தை தோற்றுவித்த அதேநேரம், வானில் இருந்து குண்டுகளை போட்டு மக்களை கொல்லுகின்ற ஏகாதிபத்திய பயங்கரவாதமே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை மேலும் வளர்த்தெடுக்கின்றது.

இஸ்லாம் மற்றைய மதங்கள் போல் ஒரு மதம். எல்லா மதங்களிலும் அடிப்படைவாதம் இருப்பது போல், அது மத ரீதியான வன்முறைகளையே சார்ந்து இருப்பது போல், இஸ்லாம் பெயரிலும் வன்முறையும், பயங்கரவாதமும்
காணப்படுகின்றது.

இஸ்லாமிய மத வன்முறைகளும், மதப் பயங்கரவாதமும் இன்று உலகமயமாதலில் கூர்மை அடைந்து இருப்பதும், அந்த மதத்தின் தனி இயல்பல்ல. மாறாக ஏகாதிபத்திய பயங்கரவாதம் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பொருளாதார வளங்களைச் சூறையாடவும், பிற ஏகாதிபத்திய போட்டியை தடுக்கவும் கையாளும் அதன் ஜனநாயக விரோத கொள்கைகளே காரணமாக இருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களை தோற்றுவித்து, இதற்கு ஆயுதம் நிதி வழங்கியவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள்தான்.

தனிப்பட்ட மனிதனின் உரிமையாக மத வழிபாடு இருக்க முடியுமே ஒழிய, மதம் சமூகத்தை வழிநடத்த முற்படும் போது பயங்கரவாதமாக அது மாறுகின்றதை காணமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

எழுத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பது, ஜனநாயகத்தை நேசிக்கின்றவர்களின் கடமை. எழுத்துச் சுதந்திரம் சமூகத்துக்கே ஒழிய, அது தனிமனிதனின் தனிப்பட்ட வக்கிரமாக மாறும் போது, ஏகாதிபத்தியம் சார்பான எழுத்து பயங்கரவாதமாகி விடுகின்றது. எழுத்துச் சுதந்திரம் மக்கள் கூட்டத்தின் நம்பிக்கையை கேவலப்படுத்த முடியாது. மாறாக மக்களுக்கு பகுத்தறிவு பூர்வமாக அறிவூட்டுவதும், மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டுவதன் மூலம், அவர்களை சுமைகளில் இருந்து விடுவிப்பதுமே எழுத்துச் சுதந்திரமாகும்.

ஆயுதம் மற்றும் நிதி மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் ஏகாதிபத்திய கொள்கைக்கு நிகரானது, எழுத்துச் சுதந்திரம் மூலம் தூண்டுகின்ற பயங்கரவாதம். முகமது நபியை நிர்வாணமாக்கி முன்னிறுத்தி எழுதுவதன் பின்னால், ஏகாதிபத்திய நோக்கம் இருக்கின்றது. அது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதே. பாரிஸ் சார்லி எப்டோ" மீதான வன்முறை ஏன் என்ற கேள்வி கேட்டு அணுகவேண்டும்.