24
Mon, Jun

இதழ் 7
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும்.

படை எடுத்த இருபத்தோரு நாட்களில் இராக் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. போரில் தோற்ற சதாம் உஹசைன் தப்பி, தலைமறைவானார். 2003 டிசம்பர் 13ல் சதாம் உஹசைன் கைது செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு, 2006 நவம்பர் 5ம் தேதி தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடுவதற்கு அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு துஜைல் என்ற ஊரில் 148 ஷியாக்களைக் கொலை செய்தார் என்பது தான். இராக்கைப் பிடித்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இதுவரை பேரழிவு ஆயுதங்களை அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை.

கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியான ஒரு கல்வி ஆய்வு, "இதுவரையில் இராக்கில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டும்' என்று குறிப்பிடுகின்றது. ஏற்கனவே, பிரிட்டனைச் சார்ந்த ஓர் அமைப்பு ஊடகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போரினால் ஏற்பட்ட வன்முறை மூலம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,000 என்று தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, கனடா, பாக்தாத் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை இராக் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் துணையுடன் நடத்தின. போர், கலவரச் சாவுகளுடன் மட்டும் இந்த ஆய்வு நிற்கவில்லை. போர் ஏற்படுத்திய மறைமுகச் சாவுகளையும் கணக்கில் எடுத்துள்ளது.

உண்மையில் இந்தச் சாவுகள் அமெரிக்காவுடைய படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மூலமும் நடந்துள்ளன. அந்த சாவுகளையும் இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது. இதற்கு முந்தி எடுக்கப்பட்ட ஆய்வுகள் இத்தனை நீண்ட ஆண்டு கால அளவை எடுக்கவில்லை.

ஆனால் இந்த ஆய்வு 2003லிருந்து 2011 வரையிலான கால கட்டத்தை எடுத்திருக்கின்றது. போர்க் கலவரம் மிக மிக அதிகமான உயிர்களைப்பலி கொண்டிருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினர் போர் மூலமாகவே கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விபரம் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கில் வரவில்லை. போரினால ஏற்பட்ட மறைமுக சாவு பற்றிக் குறிப்பிடுகையில், சில நிகழ்வுகளை அது பதிவு செய்துள்ளது.

பிரசவ வேதனையினால் துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெண் மருத்துவமனைக்கு உடனே போக வேண்டும். ஆனால் அவள் அவ்வாறு போக முடியவில்லை. காரணம் போர் தான். அதனால் அந்த பெண் மரணத்தைத் தழுவுகின்றாள். பாதுகாப்பில்லாத மாசுபட்ட குடிநீர் குடிப்பதால் மக்கள் மரணிக்கின்றனர். போரில் அல்லது கலவரத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியவில்லை. காரணம் மருத்துவமனை தன் சக்திக்கு மீறிய அளவில் நோயாளிகள் சேர்க்கையினால் திக்குமுக்காடி, திணறியது.

இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இவை மறைமுக மரணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், மனித குலத்திற்கு எதிரான தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரிலும், ஒரு 148 பேர்களைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் சதாம் உஹசைனுக்கு மரண தண்டனை என்றால் இராக்கில் மட்டும் இத்தனை லட்ச மக்களைக் கொன்ற உலக மகா பாதகன், உலக மகா கிராதகன், ஈவு இரக்கமற்ற சண்டாளன் ஜார்ஜ் புஷ் மற்றும் உத்தம புத்திரனாய், உலக மகா யோக்கியனாய் வேதாந்தம் பேசி பதவிக்கு வந்து புஷ்ஷின் பாதையில் பயணம் செய்கின்ற ஒபாமா ஆகியோருக்கு என்ன மாதிரியான தண்டணை கொடுக்க வேண்டும் என்று நியாயம் உள்ளம் கொண்டோர் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சண்டாள அமெரிக்காவின் ஆப்கானிய படையெடுப்பின் போது கொல்லப்பட்டோரின் புள்ளி விபரத்தைப் பார்த்தோம் என்றால் இதயம் வெடித்து விடும். அந்த அளவுக்கு அவர்களது கொலைப் பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இந்த அமெரிக்கா தான் இன்றைக்கு உலகில் சட்டாம்பிள்ளைத்தனம் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த அராஜகனைத் தட்டிக் கேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகள் முதுகெலும்பில்லாத, கடைந்தெடுத்த கோழைகளாக இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவின் அடிவருகிகளாகிவிட்டனர். உலகில் எங்காவது ஓரிரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டு விட்டால் அங்குள்ள தனது தூதரகங்களேயே மூடிவிட்டு அமெரிக்கர்களை உடனே அங்கிருந்து வெளியேறச் செய்கின்ற நாடு தான் அமெரிக்கா.

தன்னுடைய நாட்டவரின் உயிர் தான் உயிர்! மற்ற நாட்டுக்காரர்களின் உயிர் மயிர் என்று நினைக்கின்ற முதல் தர சுயநலக்கார நாடு அமெரிக்கா தான்! இல்லையெனில் இராக்கில் இப்படி ஐந்து இலட்சம் உயிர்களை அநியாயமாகப் பறித்து, பலி வாங்கியிருக்குமா? அதிலும் குறிப்பாக, பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி உள்ளே அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் அமைதியை சீர்குலைத்திருக்குமா? இன்றளவும் அங்கு சிவகாசி சரவெடி போல் குண்டு வெடித்து உயிர்கள் அன்றாடம் அழிவதற்குக் காரணம் இந்த அக்கிரமக்காரன் அமெரிக்கா தான். தன்னை யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்ற தலைக்கனத்தில் இந்த அமெரிக்கா ஆடிக் கொண்டிருக்கின்றது.