25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காணாமலாக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் வற்புறுத்தும் தொடர் போராட்டத்தில் வடக்கு கிழக்கு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மட்டுமல்ல திருகோணமலை முதற்கொண்டு தொடர்ச்சியான சத்தியாக்கிரக வடிவத்தில் நடத்தப்படும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இரு மாதங்களை கடந்துள்ளது. ஆனாலும், அரசாங்கத்தின் எந்தவொரு அதிகாரியும் இது விடயத்தில் பொறுப்புடன் தலையீடு செய்யவில்லை என்பதுடன் தீர்க்கப்படாமலிருப்பது காணாமல் போனவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. ஆரம்பத்தில் அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதாக தேர்தல் வாக்குறுதியளித்த அரசாங்கம் இலங்கையில் அரசியல் சிறைக்கைதிகள் கிடையாதென இப்போது கூறுகின்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களை ரத்துச் செய்வதாக கூறிய வாக்குறுதியும் மீறப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. யுத்த காலத்தில் மக்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகள் சம்பந்தமான பிரச்சினை கூட இதுவரை தீர்க்கப்படவில்லை.

சம உரிமை இயக்கம் என்ற வகையில், நடந்த அவலங்களுக்குப் பின்பு பறிக்கப்பட்ட காணிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு திருப்பிக் கொடுக்குமாறும், தொடர்ந்தும் சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை உடன் விடுதலை செய்யுமாறும், காணாமல் போனோர் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்துமாறும், தொடரும் அடக்குமுறைகளை சுருட்டிக் கொள்ளுமாறும் வற்புறுத்தும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையே வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பல இடங்களிலும் ஜனநாயக உரிமைகளுக்காக நடக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும், உண்ணாவிரத நடவடிக்கைகளுக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றது. ஏப்ரல் 27ம் திகதி மேற்கொள்ளப்படும் காணாமல் போனவர்கள் விடயத்தில் நீதியை பெற்றுக் கொள்ளவும், பறிக்கப்பட்ட காணிகளை திரும்ப ஒப்படைக்குமாறும் வற்புறுத்தும் ஹர்த்தால் நடவடிக்கைக்கும் தோழமையுடனான ஒத்துழைப்பை வழங்கும் சம உரிமை இயக்கமானது வடக்கிற்கும் கிழக்கிற்கும் நியாயமான ஜனநாயக உரிமைகளை உடனடியாக வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.

அதேபோன்று, சம உரிமைகளுக்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நாம் வடக்கிலும், கிழக்கிலும் யுத்தத்தினால் துன்பத்தில் தள்ளப்பட்ட மற்றும் அடக்குமுறைக்கு பலியான மக்களின் போராட்டத்திற்கு சகல இலங்கை மக்களினதும் செயல் ரீதியிலான பங்களிப்பை சேர்ப்பதும் இத்தருணத்தின் அத்தியாவசிய பொறுப்பாகும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

சம உரிமை இயக்கம்

2017 ஏப்ரல் 26