25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்முறை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்களின் சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினத்தை நினைவு கூறுவது ஒரு புறம் கேலிக்கூத்தாகும். ஆகவே போலி சுதந்திர தினம் தொடர்பில் கடுமையான விமர்சனம் எமக்கு உண்டு. மேலும் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்திற்கு பின்பு சரிந்திருக்கும் வடக்கு மக்களின் வாழ்க்கையை மீளமைப்பதற்கும், அம்மக்கள் மத்தியில் உருவாகியுள்ள சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை களைவதற்கும் எடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. சகல அரசியல் கைதிகளினதும் விடுதலை, காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடுதல், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைத்தல் ஆகியன முக்கிய விடயங்களாக உள்ளன. என்றாலும் அந்த விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஊமையாகவே இருக்கின்றது.

நிலைமை இப்படியிருக்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நல்லெண்ணத்துடன் செயற்படுவதாக நாட்டுக்கும் உலகுக்கும் காட்டும் நோக்கில் தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு, போலி சுதந்திர தினமும் அந்த தேசிய கீதமும் சம்பந்தமாக எமக்கு பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அந்த தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை எதிர்க்கும், தனது இருப்பிற்க்காக இனவாதத்தை கையிலெடுத்த சில அரசியல்வாதிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி பலவிதமான எதிர்ப்புகளை முன்வைக்கும் விதத்தை இந்நாட்களில் காண முடியும். ஒரே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடும் உரிமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் உருவாகி வரும் இந்த இனவாதிகளின் எதிர்ப்பை நிபந்தனையின்றி தோற்கடிக்க வேண்டும்.

இலங்கையை பல்லின சமூகங்களை கொண்ட ராஜ்ஜியமாக ஏற்று அங்கு வசிக்கும் அனைத்து இனக்குழுமங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். சமூக தேவைகளுக்கேற்ப தேசிய கீதத்தை தமிழில் பாடுவது என்பது முதற்கட்ட நடவடிக்கை மாத்திரமேயாகும். அவ்வாறான நடவடிக்கைக்கு எதிர்ப்பு காட்டுவது என்பது சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் மீண்டும் உருவாக்கி யுத்த ரீதியில் தீர்வுகாணும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவதாகவே இருக்கும். அது மாத்திரமல்ல ஒரு அரசாங்கத்திற்கு மதமோ மொழியோ இருக்க முடியாது. அரசு எப்போதும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். எனவே தேசிய கீதத்தை தமிழில் பாடும் விடயத்தில் நிபந்தனையின்றி தோற்றி நிற்கும் நாம், அவ்வாறான எளிய நடவடிக்கைகளுடன் நிறுத்தி விடாது ஒடுக்கப்பட்ட இனக்குழுமங்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்று சேர்ந்து போராடுமாறு தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நன்றி

ரவீந்திர முதலிகே

அமைப்பாளர்

சமவுரிமை இயக்கம்
03-02-2016