25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமவுரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் பேர்ணான்டோ புள்ளே மற்றும் தோழர் கிருபாகரன் ஆகியோர் நேற்றைய தினம் (16-05-2015) வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கமானது பல வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடு தளுவிய பாரிய போராட்டங்களை முன்னெப்பதே.

இச் சந்திப்புகளில் கலந்து கொண்ட கைதிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் தாம்; தமிழ் கூட்டமைப்பு உட்பட பல தமிழ் அமைப்புகள் கைதிகள் விடுதலைக்காக ஒழுங்கு செய்த போராட்டங்களில் பங்கேற்றதாகவும்; அவற்றினால் இதுவரை எத்தகைய பலன்களும் கிடைக்கப் பெறாததால் ஒருவகை  நம்பிக்கை அற்ற கைவிடப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதிகள் விடுதலைக்காக தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியே போராட்டம் நடாத்தாமல் புத்தி ஜீவிகள், புலம்பெயர்ந்த மக்கள், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களது குறுகிய அரசியல் நோக்கங்கள் கடந்து, கைதிகளின் விடுதலைக்கான ஒரு வெகுஜன அமைப்புக்கு ஊடாக போராட முன் வேண்டும் என்ற தமது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

சமவுரிமை இயக்கம் ஆனது அரசியல் கைதிகள் விடுதலைக்காக தென்பகுதி உழைக்கும் சிங்கள, முஸ்லீம் மக்களையும்; புத்திஜீகளையும் அணிதிரட்டி தெற்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த போது அதனை வந்திருந்த கைதிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றதுடன்; தென்பகுதி மக்களின் அத்தகைய போராட்ட முன்னெடுப்பிற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தனர். மேலும் நாடு தழுவிய போராட்டம் ஒன்று இன, மத வேறுபாடுகளை கடந்து முன்னெடுக்கும் போது அது அரசினை நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மீண்டும் அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்ட முன்னெடுப்புகள் குறித்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்துவது குறித்த பேச்சுகளுடன் இந்த சந்திப்புகள் நிறைவடைந்தன.