25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆரின் இனவாத அரசின் கீழ் 1983 இல் இடம்பெற்ற யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று  மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்ற தலைப்பில் கொழும்பு (பொரல்ல), காலி, பண்டாரவளை, யட்டியாந்தோட்ட(கேகாலை), நாவலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமவுரிமை இயக்கத்தால் கையெழுத்து இடும் போராட்டம் இடம் பெற்றுள்ளது.

இதில் காலி, யட்டியாந்தோட்ட(கேகாலை) ஆகிய இடங்களில் அதிகம் சிங்கள மொழி பேசுபவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை சமவுரிமை இயக்கத்திற்கு வழங்கியதுடன் பாராட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து நாவலப்பிட்டிய, பண்டாரவளை, பகுதிகளில் அதிகமாக அனைத்து இன மக்களும் கலந்து கொண்டு தமது கையொப்பத்தை இட்டதுடன் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கூறிச் சென்றுள்ளனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தால் இன்று நடத்தப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கு பெருமளவிலான மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு சென்று தமது கையொப்பங்களை இட்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.

கொழும்பு பொரள்ளையில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் காலையில் இருந்து அதிகமானவர்கள் கலந்து கொண்டதை அவதானித்த காவல்துறையினர் உடனடியாக சமவுரிமை இயக்க பதாகையை இருந்த இடத்தில் இருந்து அகற்றியும் மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றியும் சமவுரிமை இயக்க கையெழுத்துப் போராட்டத்தை இடை நிறுத்தியதுடன் அதன் முக்கிய உறுப்பினரான தோழர் சேனாதீர குணதிலக்காவையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இன்று அனைத்து இனங்களிடையேயும் ஒரு ஐக்கியம் உருவாக வேண்டும் என்பதை வெறும் சொல்லளவில் கூறாது செயற்பாட்டளவில் போராட முயற்சிக்கும் சமவுரிமை இயக்கத்தை இலங்கை அரசும், தமிழ் இனவாதிகளும் அழிக்கவே முற்படுகின்றனர்.

காரணம் தமது இருப்பானது இனவாதத்தில் மேல் தான் கட்டப்பட்டுள்ளது என்பதாலேயே.