25
Tue, Jun

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத பாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது.

இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றிய கூட்டத்தையும் குழப்பித் தடுத்தனர். இவ்வாறான அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் அனுசரணை வழங்கப்பட்டு வருவதுடன் பொலீசாரின் அரவணைப்பும் இருந்து வருவதையே காணமுடிகிறது. இவ்வாறான இன மத அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களின் வளர்ச்சியானது நாட்டில் உருவாகியுள்ள புதிய அபாயமாகும். இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஜனநாயக இடதுசாரி சக்திகளும் விழிப்புடனும் தூர நோக்குடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளதாகவே எமது கட்சி உணர்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் அம் மக்களுக்கும் எதிராக இப் பௌத்த அடிப்படைவாதப் பாசிச சக்திகள் செயல்பட்டு வந்துள்ளன. அவற்றின் உச்சகட்டமாகவே அளுத்கமவில் கொலை வெறியாட்டத்தையும் எரியூட்டல்களையும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டன. இவற்றில் எல்லாம் இப் பாசிசக் குழுக்களுக்கும் குண்டர்களுக்கும் எதிராக அரசாங்கம் பக்கசார்பற்ற உறுதியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அதேவேளை பொலிசாரின் திட்டமிட்ட செயற்பாடுகளும் மூடி மறைக்கப்பட்டன.

இவற்றின் தொடர்ச்சியாகவே சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு எதிரான இனவெறிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பின் ஒரு தமிழ் மாணவன் இனம் தொரியாதோரால் தாக்கப்பட்டான். அதன் பின்பு மற்றொரு தமிழ் மாணவன் பயங்கரவாததத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். இன்னும் தாக்குதல்களும் கைதுகளும் இடம்பெறும் என்ற அச்சுறுத்தல் தொடர்கிறது.

இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் இனவாதத்தை தூண்டி இனமோதல்களை உருவாக்கும் உள்நோக்கத்துடனும் அதன் பரீட்சார்த்த நடவடிக்கையாகவுமே சப்பிரகமுவ பல்கலைக்கழகச் சம்பவம் இப் பாசிசக் குழுக்களால் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் நோக்குடனேயே இத்தகைய இன மத அடிப்படைவாத பாசிசக் குழுக்களும் குண்டர்களும் தாராளமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே காணமுடிகிறது.

இச்சூழலில் இவ் இனமத அடிப்படைவாதப் பாசிசக் குழுக்கள் கட்டவிழ்த்துவிட்டு வரும் இனவாதத்திற்கு எதிராக ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவையும் அனைத்து தமிழ் முஸ்லீம் மலையக மக்களிடமும் குறிப்பாகச் சிங்கள மக்களிடமும் சென்றடைய வேண்டியவையாகும்

10-08-2014

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி