25
Tue, Jun

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பொலிசார் நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் செயற்பாடேயாகும். பொலிசாரின் இந்நடவடிக்கை வடக்கு கிழக்கில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்கை என்பன தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் எதிரொலியே ஆகும்.

இது தமிழ் மக்களுக்கு தொடர்ந்து வாய்ப்பூட்டும் கைவிலங்கும் போட்டு வைத்திருப்பதன் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. மேற்படி சம்பவத்தை எமது புதிய-ஜனநாயக மாக்சிய லெனினிசக்கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் கடந்த பின்பும் வடக்குக் கிழக்கு மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற போதிலும் வீடின்மை, உணவின்மை, தொழில் இன்மை, வருமானமின்மை, கல்வி சுகாதாரத் தேவைகள் பெற முடியாமை போன்றவற்றால் அல்லற்பட்ட நிலையில் அறைகுறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது சொந்த வாழ்விடங்களுக்கு மக்கள் திரும்பிச் செல்வது தடுக்கப்படுகிறது. இத்தகைய அவலங்கள் மத்தியிலேயே அதிகாரத்தின் துணை கொண்டு நில அபகரிப்பகளும் ,நில ஆக்கிரமிப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. இவற்றையிட்டு மக்கள் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஜனநாயக வழிமுறைகளின் ஊடாகத் தெரிவிப்பது முற்றிலும் நியாயமானதேயாகும். அதனைத் தடுத்து மறிப்பதன் நோக்கம் உண்மைகள் வெளியே வரக் கூடாது என்பதற்காகவேயாகும். இது அரசாங்கத்தின் பாசிசப் போக்கின் வெளிப்பாடுமாகும்.

அரசாங்கத்தின் மற்றொரு பாசிச வெளிப்பாடே அம்பாந்தோட்டை கட்டுவனப் பகுதியில் ஜே.வி.பி. கூட்டத்தின் மீதான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலாகும். இதில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் அரசின் ஆதரவு பெற்ற ஆயுதக் குண்டர்களின் கைவரிசை என்றே ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. அதனை எளிதில் நிராகரித்து விட முடியாது. எனவே மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உரிய குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகிறது.

இன்று ஒரே நேரத்தில் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் இடம்பெற்றுவரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அராஜக அடக்குமுறைகளை அவதானிக்கும் போது அவை பாசிசப் பாதையில் பயணித்து வருவதையே எடுத்துக் காட்டுகிறது. இவற்றுக்கு எதிராக நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும் தத்தமது குறுகிய எல்லைகளைத் தாண்டி வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரள்வதைத் தவிர வேறு மார்க்கம் இருக்க முடியது என்பதையே எமது கட்சி சுட்டிக்காட்டுகிறது.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர்  சி. கா. செந்தில்வேல்