25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர் தலைவர்களை உடன் விடுதலை செய்!

இந்தியாவில் அமைந்துள்ள ஜப்பான் நிறுவனமான மாருதி–சுசுகி ஆலையின் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கும் நாம், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய ஆட்சியாளர்களை வலியுறுத்துகின்றோம். 2012ல் இந்தியாவின் புதுடில்லி நகரை அண்மித்த ஹரியானா மாநிலத்தில் மனேசார் மாருதி சுசுகி மோட்டார் கார்களை பொருத்தும் ஆலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின்போது, அந்நிறுவனத்தின் மனிதவள முகாமையாளரொருவரின் இறப்பு சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் 18ம் திகதி வழங்கப்பட்டது. அதன்படி 13 தொழிலாளர்களுக்கு ஆயுள்தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 வருடங்களும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 12 பேர் மாருதி சுசுகி தொழிற்சங்கத் தலைவர்களாவர்.

இது தொழிலாளர் தலைவர்களையும், தொழிற்சங்கங்களையும் இலக்கு வைத்த அடக்குமுறை என்பது விவாதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் போராட்டத்திற்கு மத்தியில் தீயில் சிக்கி உயிரிழந்த முகாமையாளர், தொழிலாளர்களுக்கு ஆதரவானவர் என்பதுடன், தொழிற்சங்கத்தை பதிவுசெய்வதில் ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதும் அதனை உறுதி செய்யும் இன்னொரு காரணியாகும். அவற்றோடு, சாட்சி விசாரணையில் முரண்பாடுகள் மற்றும் பொய்ச்சாட்சிகளும் முன்வைக்கப்பட்டன. இது இந்திய ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்தும் நவதாராளமய மறுசீரமைப்புகளுக்கு எதிரான தொழிலாளர் செயற்பாட்டாளர்களை தொடக்கத்திலேயே ஒழித்துக்கட்டும் அடக்குமுறைத் திட்டத்தின் முதல் நடவடிக்கை என்பது வெளிப்படை. உலகின் அதிக தொழிலாளர்கள் கலந்து கொண்ட வேலை நிறுத்தம் என்ற வகையில் வரலாற்றில் பதியப்பட்ட 2016 செப்டம்பரில் நடந்த, நவதாராளமய எதிர்ப்பு இந்திய தொழிலாளர் போராட்டமானது, இந்திய ஆட்சியாளர்களை கிலி கொள்ளச் செய்ததால், இது அதற்கெதிரான அவர்களது அடக்குமுறை எதிர்வினையாகும்.

இந்தக்கொடூரமான அடக்குமுறைக்கு முன்னால் இலங்கை தொழிலாளர் வர்க்கம், இந்திய தொழிலாளர்களுக்கு தமது தோழமையுடனான கரங்களை நீட்டுகின்றது. பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அநீதியான வழக்கு விசாரணை ஊடாக சிறையிலடைக்கப்பட்ட சகல தொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறும், மாருதி சுசுகி முகாமையாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் சம்பந்தமாக நேர்மையாகவும் நீதியாகவும் விசாரணை நடத்துமாறும் இந்திய அரசாங்கத்திற்கு வற்புறுத்தும் நாம், இந்திய தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் பங்காளிகளாக ஆகுமாறும், உலகம் பூராவும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் நவதாராளமய கொள்ளைக்கு எதிராக எழுந்து வருமாறும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கம் அடங்கலாகஎல்லா உழைக்கும் மக்களிடமும் வேண்டுகின்றோம். 

அரசியல் சபை

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2017 மார்ச்  27