25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று காலை சுமார் 10 மணியளவில் யாழ் ஸ்ரான்லி வீதியில் முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் சரணடைந்தும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்க்கான போராட்டத்தை தோழர் லலித்துடன் சேர்ந்து முன்னெடுத்தமைக்காக மகிந்த அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தோழர் குகன் முருகானந்தனின்  மகள் சாரங்கா அலுவலகத்தை சிவப்பு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னிலை சோசலிச கட்சியினை சேர்ந்த தோழர்களும், மக்கள் போராட்ட அமைப்பினை சேர்ந்த தோழர்களும், பத்திரிக்கையாளர்களும், வடபகுதி இடதுசாரிகளுமாக ஏறத்தாழ ஜம்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதீர அவர்கள், வடபகுதியில் இடதுசாரியம் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக முன்னர் ஒருகாலத்தில் இருந்ததனை சுட்டிக்காட்டியதுடன், தோழர் சண்முகதாசன் அவர்களால் நடாத்தப்பட்ட பாரிய போராட்டங்களின் தொடர்ச்சியாக இடதுசாரியம் பரந்து பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்ததனை நினைவு கூர்ந்தார். கடந்த 30 வருடங்களிற்கு மேலான இனவாத யுத்தம் இடதுசாரியத்தை அதன் வளர்ச்சியை பின்தங்க வைத்து விட்டது. இடதுசாரியத்தை மீண்டும் வடபகுதியில் மீட்டு வளர்த்து செல்வதற்க்கான நம்பிக்கையான தொடக்கமே இந்த அலுவலக திறப்பு என தெரிவித்ததுடன், இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு ஒரு இடதுசாரிய பாராம்பரியம் உண்டு. முன்னர் இந்த கட்டிடத்தில் கம்யூனிச கட்சியின் செயற்பாடுகள் பல நிகழ்ந்துள்ளன எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய மக்கள் போராட்ட அமைப்பின் தோழர் தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் இடதுசாரியம் தோற்று விட்டது என கூறுகின்றனர். அது உண்மையல்ல. இடதுசாரிகள் என்று கூறுபவர்கள் இடதுசாரிய நடைமுறையினை கைவிட்டு விட்டு வலதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இனப்பிரச்சனை, சாதியபாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் இருந்து மக்கள் விடுதலை அடைய தீர்வுகளை கொண்ட ஒரே வழி இடதுசாரிய மாற்றீடு மட்டுமே என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னிலை சோசலிக் கட்சியின் பிரச்சார செயலர் புகுது ஜெயக்கொட சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜோர்ச் பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.