25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவீஸ் நாட்டுத் தொழிலாளர்களோடு பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் நீண்ட ஊர்வலம். அதில் பலதரப்பட்ட 60 பதிற்கும் மேலான இடதுசாரி கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள், பெண்கள் அமைப்புக்கள், சிறுவர், சிறுமிகளுக்கான அமைப்பு, தெழிற்சங்கங்கள், சமூக நலவிரும்பிகளான ஆயிரக்கணக்கான தனிநபர்கள் என 13 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அமைப்புக்களின் துண்டுப்பிரசுரம் நியாயத்தையும், நேர்மையையும் கோரி எழுதப்பட்டிருந்தது. அவற்றில் குறிப்பாக சுவீஸ் அரசால் கொண்டுவரப்படவிருக்கும் அகதிகளுக்கு எதிரான கடுமையான சட்டவாக்கம் என்ற நிலைப்பாட்டை கண்டித்தும், 9 ஜனில் அதற்கெதிரான வாக்களிப்பைச் செய்யுமாறு கோரியும், முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரிகள் என்ற அமைப்பு (AKL) துண்டு பிரசுரத்தை வினியோகித்தது.

வெனிசுலாவில் அமெரிக்காவின் நெருக்கமான அரவணைப்போடு அதிகமான பணத்தைப் பெற்று H.Capriles தலைமையிலான எதிர்க்கட்சி வன்முறைகளை கட்டவிழ்த்துக் கொண்டும், அதனூடாக அமெரிக்க எதிர்ப்பு அரசைக் கவிழ்த்துவிடும் சதியில் ஆயுதக்குழுக்களை அமைத்து வருவதாகவும், முதலாளித்துவ ஊடகங்களில் அதற்கு துணை போகும் பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதையும் இந்த எதிர்கட்சியானது எலக்ரோனிக் முறையில் வாக்கை கணக்கெடுக்கும் 18 நிலையைங்களில் தேர்தல் பதிவாளர்னூடாக Software தரவுகளைப் பெற்றுக்கொண்டு வாக்கு கணக்கில் மோசடியைச் செய்திருப்பதாகவும் வெனிசுலா புரட்சியைப் பாதுகாப்போம் என்ற அமைப்பு தனது துண்டுப்பிரசுரத்தில் அதிர்ச்சியான செய்தியையும் அம்பலப்படுத்தியிருந்தது.

மேலும் அவ்வூர்வலத்தில் முதலாளித்துவத்துக்கெதிரான கோசங்களை எழுப்பியும், புரட்சிகர வாசகங்களை சுவர்களில் பதித்துக்கொண்டும் கிட்டத்தட்ட் 800 வரையிலான கம்யூனிஸ்டுகள் அணிவகுத்து வந்தனர். விசேடமாக அவர்களைக் கண்காணிக்கவும் புகைப்படமெடுக்கவும், வீடியோவில் பதிவு செய்யவும் தெருவோரங்களில் நின்றிருந்த சிவில் உடைப் பொலிஸ்சாரை நோக்கி அவ்வணியினர் தண்ணீர் நிறைத்த பலூன்களை வீசியெறிந்தனர். கூச்சல் எழுப்பி, அவமானப்படுத்தி, அவர்களை விரட்டினார்கள்.

Rote Falken ( சிவப்பு வேட்டைப்பறவை) என்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கான அமைப்பு பிள்ளைகளுக்கான உரிமைகள், பாதுகாப்பு, மொத்தத்தில் தாம் வாழ்வதற்கான வழமான, அமைதியான, உலகத்தை உருவாக்க கோரிக்கை விட்டனர். அதில் நூற்கணக்கான பிள்ளைகளும், பெற்றோரும், இளைஞர்களும் புரட்சிகர பாடல்களை ஒலிபரப்பியும், கோசங்களை எழுப்பியவாறும் உழவியந்திர பெட்டியில் பாதகைகளை தொங்கவிட்டும் அணிவகுத்து வந்தனர்.

முன்னிலை சோசலிச கட்சித் தோழர்கள் அவ் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இனவாதத்திற்கு எதிரான கோசங்களோடும், வடகிழக்கு மக்களுக்கு சமவுரிமையை வழங்கு, இராணுவ - இனவாத குடியேற்றங்களுக்கான காணி அபகரிப்பை நிறுத்து என்ற கோசங்களைத் தாங்கியும், அத்தோடு ''இந்த உலகம் மாக்ஸ்சியத்தை ஆயிரம் தடவைகள் வேண்டி நிற்கிறது" என்ற சுலோகத்தையும் தாங்கியிருந்தனர். அச் சுலோகமானது பலரது கவனத்தை ஈர்த்ததாக அமைந்தது.

இவ்நிகழ்வுகளை அவதானித்த சுவீஸ்சின் பிரபல பத்திரிகையான Tages Anzeiger என்ற பத்திரிகை ''சூரிச்சின் தெருக்களில் சிவப்புக்கைகள்"" என அடுத்தநாள் எழுதியிருந்தது.

எல்லா நாட்டைச் சேர்ந்த முற்போக்காளர்களும் சமூக நலவிரும்பிகளும் அந்த மாபெரும் நிகழ்வில் தோன்றினார்கள். ஆனால் எமது தரப்பாக, இருபது வருடங்களாக முற்போக்கு வட்டமென ஐனநாயக மறுப்பை விறாண்டிக் கொண்டிருக்கும் எவரும் தலைகாட்டவில்லை. எப்போதும் அவ்வாறு இருந்ததுமில்லை இம்முறை தனிப்பட்ட ரீதியாக அழைப்பு விடப்பட்டபோதும் தலையை இழுத்துக் கொண்டார்கள்.

குறைந்த சம்பளம் அதிக வீட்டு வாடகை, மக்களின் வட்டிப்பணத்தில் கொழுத்த சம்பளம் எடுக்கும் வங்கி முகாமையாளர்களை எதிர்த்தும். ஓய்வூதியம், மற்றும் சமூகநலத்திட்டங்களுக்கான நிதிவெட்டை எதிர்த்தும், யுத்தத்திற்கும், யுத்தமுஸ்திப்பிற்கமான போக்கை கண்டித்தும் மொத்தத்தில் முதலாளித்துவ முறைமையானது மிச்சமாக வறுமையையும் துன்பத்தையும் தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. என்பதை வெளிப்படுத்திய ஊர்வலமாகும்.

(நேரடித்தொகுப்பு-திலக்)