25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரட்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.


இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதுபோல் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுபோல் நானும் கொலை செய்யப்பட்டிருப்பேன்." என குமார் குணரட்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


"என்னை இலங்கை அரச படையினரே கடத்தினர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். கண்ணை கட்டிவிட்டு சித்திரவதை செய்தனர். பாலியல் ரீதியில் சித்திரவதை செய்தனர்." என குமார் குணரட்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதை சர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ள வேண்டும் என குமார் குணரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். "இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுவதை அனைவரும் மறுத்தால் தொடர்ந்தும் கடத்தல்கள், கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது." என பிரேம்குமார் குணரட்ணம் கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


"தடையற்ற சிந்தனைகள் ஊடாக உலகம் மொத்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்." என பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.