25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமைக்கு ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கும், அவர்களது சகாக்களின் லாப நோக்கமுமே  பிரதான காரணங்களாகும். கண்ணெதிரே இருந்த ஆபத்தை தடுக்க முன்வராத ஆட்சியாளர்களை மனித கொலைகாரர்கள் என்றே கூற வேண்டும் என மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி நுவான் போபகே ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு ராணுவம் வழங்கிய நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்த அனர்த்தத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதனை சரியாக கூற முடியாதுள்ளது. வெளியிடங்களில் இருந்து உறவினர் வீடுகளிற்கு வந்தவர்கள் கூட குப்பை மேட்டு சரிவிற்குள் சிக்கியிருக்க கூடும். இவர்கள் 40 அடிகளிற்கு கீழ் புதையுண்டு இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

தற்போது ஆட்சியாளர்கள் இனிமேல் இந்த இடத்தில் குப்பைகளை கொட்டமாட்டோம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் கடந்த 5 வருடங்களிற்கு முன்பிருந்தே ஆட்சியாளர்களிடம் இது குறித்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம். அப்போது உரிய நடவடிக்கையினை ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருந்தால், இந்த அனர்த்தம் தடுக்கப்பட்டிருக்கும். அதனை விடுத்து விட்டு அனர்த்தம் நடந்த பின்னர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை மனதில் கொண்டு மக்களை இப்போது சந்திப்பது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அரசியல்வாதிகள் மக்களை தங்களது அரசியலுக்காக மாத்திரமே பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. மக்கள் குப்பை மேடு குறித்து போராடிய போது பொலிஸ், ராணுவம் மற்றும் குண்டர்களை வைத்து தாக்குதல் நடாத்தி விட்டு இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது பற்றியும் இங்குள்ள மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

அதிகாரிகள் மக்கள் மீது குற்றம் சாட்டுகிறர்கள். தாம் ஒரு மாதத்திற்கு முன்பே மக்களை எச்சரித்ததாக கூறுகின்றனர். உண்மையில் அதிகாரிகள் எத்தகைய எச்சரிக்கை முன்னறிவித்தல்களையும் இந்த பகுதி மக்களிற்கு விடுத்திருக்கவில்லை. மாறாக சில நாட்களிற்கு முன்பாக இந்த பகுதியில் நிரந்தர பதிவுகள் இல்லாத குடும்பங்களிற்கு மாத்திரம் 15 லட்சம் நட்டஈடு வழங்கி வேறு இடங்களிற்கு அனுப்பி வைத்தனர்.

ஏனைய குடும்பங்கள் இந்த இடத்தின் சுகாதார கேடு மற்றும் அபாயத்தன்மைகளால் விட்டு விலகிச் செல்ல நினைத்தாலும் அது அவர்களால் முடியாததொன்றாகும். இது இந்த மக்களின் பாராம்பரிய நிலம். மக்களின் குடியிருப்பு நிலங்களில் குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகின்றதே ஒழிய, மக்கள் குப்பை கொட்டும் இடத்தில் மக்கள் குடியமரவில்லை.

தற்போது இங்குள்ள 130 குடும்பங்களை இங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இந்த மக்கள் வெளியேறிச் சென்று வாழ வேறு இடங்கள் கிடையாது. இந்த ஆட்சியாளர்கள் மக்களை விரட்டும் செயற்பாட்டை நிறுத்தி, மலை போல குவிந்துள்ள குப்பை மேட்டை உடனடியாக அகற்ற முன்வர வேண்டும்.

ஐந்து வருடங்களிற்கு முன்பாக முன்னைய ஆட்சியாளர்கள் தமக்கு அதிக லாபம் கிடைத்ததனால் குப்பையை அகற்ற முன்வந்த 60 இற்கு மேற்பட்ட நிறுவனங்களின் முயற்சிகளை முடக்கினார்கள். 5 வருடங்களிற்கு முன்பு இது போன்ற ஒரு சரிவு சிறிதாக ஏற்பட்ட போதே அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று ஒரு பேரனர்த்தம் ஏற்ப்பட்டிருப்பதனை தவிர்த்திருக்க முடியும். 

கொழும்பு மாநகர சபை குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதனால் வருடம் ஒன்றிற்கு 200 மில்லியன் ரூபா லாபம் ஈட்டுகின்றது. கொலன்னாவை பிரதேச சபையில் உள்ள உறுப்பினர்களின் சகாக்கள் தான் குப்பை அள்ளும் வண்டிகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் இதனால் லாபமீட்டுவதனால் இந்த மக்களின் பிரச்சினை குறித்து அசமந்த போக்கை கொண்டிருந்தனர். இவையே இந்த பெரும் அனர்தத்தின் பின்னால் இருக்கின்ற கசப்பான உண்மைகளாகும்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு நட்டஈடு வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக இந்த இடத்தினை சீரமைத்து பாதுகாப்பான இடமாக மாற்றியமைத்து வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கை. 

தற்போதைய நிலைப்பாடு பாரதூரமாக உள்ளது. கடந்த வருடம் அரக்கநாயக்காவில் இடம்பெற்ற மண்சரிவு முன்கூட்டியே நாம் அறிந்திருக்கவில்லை. அது இயற்கை விபத்து என்று இலகுவாக கூறிவிட முடியும். ஆனால் மீதொட்டமுல்லை குப்பை மேட்டு விவகாராம் கடந்த 5 வருடங்களாக ஆட்சியாளர்களிற்கு நன்கு தெரிந்த விடயம். இது குறித்து எமது மக்கள் போராட்ட இயக்கம் பல மனுக்களை ஆட்சியாளர்களிடம் கையளித்துள்ளது. பல போராட்டங்களை நடாத்தி உள்ளது. இது ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்ப்பட்ட விபத்து என்பதனால் இந்த பகுதி மக்களை ஆட்சியாளர்கள் படுகொலை செய்துள்ளனர் என்றே கூறவேண்டும் என ஊடகவியலாளர்களிடம் நுவான் போபகே தெரிவித்தார்.