25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தின்போது சிலாபத்தில் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட அந்தனி பெர்ணான்டோவின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்குகள் நடக்கும்போது எந்தவிதமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்று பொலிசாரின் கோரிக்கையின் பேரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சனிக்கிழமை இறுதி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிரணி அரசியல் தலைவர்களும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

 

மீனவர் குடியிருப்பிலிருந்து கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தனி பெர்ணான்டோவின் உடல் மத ஆராதனைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த அந்தனி பெர்ணான்டோவின் இறுதிச் சடங்கில்

 

இறுதிச் சடங்குகளின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான பொலிசாரும் படையினரும் சிலாபம் நகர் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக செய்தியாளர்கள் கூறினர்.

சிலாபம் எலுகொடவத்த என்ற மீனவர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை அந்தனி பெர்ணான்டோவின் மரணம் தொடர்பில் நீதி கிடைக்கவேண்டுமென்று கொழும்பில் வெள்ளிக்கிழமை நடந்த எதிரணிகளின் ஆர்ப்பாட்டத்தின் போதும் குரல் எழுப்பப்பட்டது.

இலங்கையில் முக்கிய எரிபொருட்களின் விலை கடந்த சனிக்கிழமை அதிகரிக்கப்பட்டது முதலே அங்கு போக்குவரத்துத் துறையினர், மீனவர்கள், தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் எதிரணியினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் தொடர்ச்சியாக அங்கு மின்சாரக் கட்டணத்திலும் பஸ் கட்டணத்திலும் ஏற்படுகின்ற அதிகரி்ப்பை ஈடுசெய்வதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிரணிகள் கூறுகின்றன.

ஆனால் சர்வதேசக் காரணிகளே எரிபொருள் விலை உயரக்காரணம் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.