25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிரு வீரசேகர சற்று முன்னதாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வியைத் தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக பரவலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களை பொலிஸ் படையினை ஏவிவிட்டு அடக்கி ஒடுக்கி வருகின்ற இந்த நல்லாட்சி அரசின் இன்னொரு பாய்ச்சல் தான் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையினைக் கைது செய்திருக்கும் நடவடிக்கையாகும்.கல்வியினை விலைபொருளாக்கி இலவச கல்விமுறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்த நல்லாட்சி அரசின் நடவடிக்கையினை எதிர்த்து தீவிரமாக மாணவர்கள் அணிதிரண்டு போராடுவது பொறுக்க முடியாத அரசின் கண்மூடித்தனமாக நடவடிக்கையே இதுவாகும். கல்வியை விற்றுக் கொள்ளையிட நினைக்கின்ற பெரும் பணமுதலைகளுக்காக மாணவர்களையே மிதிக்கத் துணிந்திருக்கிறது இந்த நல்லாட்சி அரசு. இந்த நல்லாட்சி அரசு யாருக்கு, இந்தப் பணமுதலைகளுக்கும் பெரும் மூலதனத்துக்கும் தான் நல்லாட்சி என்பது இதிலிருந்தே புரிகின்றதல்லவா?

 

ஓவ்வொரு மனிதனுடையதும் அடிப்படை உரிமைகளில் கல்வியைப் பெறுவதென்பதும் ஒன்று. ஒரு நாட்டினுடைய பொது வளங்களில் கல்வியும் ஒன்று. கல்வியை அனைவருக்கும் உரித்தானதாக வைத்திருப்பதே மக்களுக்கான அரச சேவைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். கல்வியினை தனியார் கையில் கொடுத்து பணத்திற்கு விற்பதற்கு ஒரு அரசு முன்னிற்கிறது எனில் அது அனைத்து மக்களினதும் உரிமையில் கைவைக்கின்றது. ஒரு சில பண முதலைகளின் வியாபாரப்பண்டமாக கல்வியையும் மாற்றி அவர்களைப் பாதுகாக்கின்ற வகையில் இநதக் கல்விக் கொள்ளையை எதிர்த்து நிற்கும் மாணவர்களை நீர்பாய்ச்சியும் கண்ணீர்ப்புகையடித்தும் அடக்கியது. இப்போது முன்னின்று நடாத்தும் தலைமைகளைச் கைது செய்து சிறைப்படுத்துகிறது.

ரணில் மைத்திரி அரசே

உனது நவதாராளமய பொருளாதாரக் கொள்ளைக்கு எதிராக கிளம்பும் மாணவர்களின் குரல்களை நசுக்காதே!

கல்வி என்பது மக்கள் சொத்து அதனை தனியார் கொள்ளைக்குப் பலியிடாதே!

கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரை உடனடியாக விடுதலை செய்!!!