25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பலஸ்தீனத்தின் மேலான இஸ்ரேலின் தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பலிகொண்டுள்ளது. காசாப்பகுதி மீதான இஸ்ரேலியப் விமானப்படைகளின் மிகவும் தீவிரமான குண்டுதாக்குதல்களினால் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி கண்மூடித்தனமாக தாக்கியழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 80 பலஸ்தீனப் பொதுமக்களும் 3 இஸ்ரேலியர்களும் தாக்குதல்கள் ஆரம்பித்த நாட்களிலிருந்து இன்று வரையான சில நாட்களுக்குள்ளாகவே பலியாகியுள்ளனர். இது வரை 500 க்கு மேற்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களால் காசாப்பகுதி நிலைகுலைந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தரப்பு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான எதிர் விளைவாய் முழுக் காசாப்பகுதி மக்கள் மீதும் இஸ்ரேல் தனது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. ஆனால் தாக்குதல்களை பன்மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே இஸ்ரேல் முனைப்புடன் உள்ளது. காசாப்பகுதியின் மக்கட்தொகையில் அரைவாசிக்கும் மேலானவர்கள் சிறுபராயத்தினரே. தற்போது நடாத்தும் தனது கண்மூடித்தனமான அழிப்பு நடவடிக்கைகளை கோரமானதாக ஆக்குவதற்கும் அதிகரிக்கவும் தனது மற்றைய படைகளையும் தயாராக்கி வரும் இஸ்ரேலின் கொடூர நடவடிக்கைகளுக்குள் ஏதும் செய்வதறியாது அகப்பட்டு உயிர்பலியாகும் நிலையில் இச் சிறுபராயத்தினர் அகப்பட்டுள்ளனர்.

போர் மேகம் ஒன்று சூழ்ந்திருக்கும் தற்போதைய நிலபரம் ஒரு பாரிய போரினை நோக்கி தள்ளப்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதிக மனிதவுயிர்கள் பலிகொள்ளப்பட்டு அமைதி என்பது எட்டப்பட முடியாதளவுக்கு நிலவரங்கள் மாறிப் போகலாம்.

பதிலடி என்ற போர்வையில் ஒரு பிரதேச மக்களையே பலிகொள்ளத் துடிக்கும் இஸ்ரேலின் இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பலஸ்தீன மக்கள் மேலாக அமெரிக்க ஆசீர்வாதத்துடன் நடாத்தப்படும் இந்தக் கொடிய போரினை எதிர்த்து பலஸ்தீன மக்கள் பக்கமாக நாம் அணிதிரள்வோம்.

பலஸ்தீனத்தின் மேலான தாக்குதலை உடன் நிறுத்து!

பலஸதீன மக்கள் மீது போடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கு

தடுப்பு மதிற்சுவர்களை அகற்று !

சர்வதேச நெறிமுறைகளை மீறாதே!

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

10.07.2014