25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காங்கிரஸின் பத்தாண்டு கால ஆட்சியால் வெறுப்புற்ற மக்கள் சரியான மாற்றில்லா நிலையில் மோடியின் இந்துவக் கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்ஸின் உள்ளாட்சித் தேர்தல்களிலும், இங்கிலாந்தின் உள்ளாட்சித் தேர்தலிலும், ஐரோப்பிய ஒன்றிய யூனியன் தேர்தலிலும் மக்கள் தீவிர வலதுசாரிகளை வெல்ல வைத்ததை காண முடிகின்றது.

நடைபெற்ற இந்தியத் தேர்தலில் மக்களின் காங்கிரஸ் வெறுப்பை இந்தியத் தீவிர வலதுசாரிய பெருந்தேசியமும், சர்வதேசிய நவதாராளவாதப் பன்னாடுகளின் கடை கோடிப் பிரச்சார சாதனைகளும் "மோடி அலை", "மோடியின் குஐராத் ஸ்ரைல்" எனப்பட்ட பிரச்சார மாய வடிவங்களுக்கு ஊடாக பெரு வெட்டெடுத்தனர். இப்பிரச்சார உத்திகளும் இப் பெரும் வெற்றிக்கு பெரும் காரணமாயின.

பல நாடுகளில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இத்தேர்தல் நடைபெற்றிருந்தால், மோடி அரசிற்கு 160 முதல் 170 வரையான இடங்களே கிடைத்திருக்கும். ஜெயலலிதாவிற்கும், மம்தாவிற்கும் 16 - 17 இடங்களே கிடைத்திருக்குமென அரசியல் அவதானிகளின் கணிப்பாக உள்ளது.

இருந்தும் மோடியின் மாயை என்பது படிப்படியாக கலைய ஆரம்பித்துவிட்டது. பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை எனும் நிலை மோடியின் அரசியல் போக்கிற்கு கட்டியம் கூறுகின்றது. சுருங்கக் கூறின் காங்கிரஸ் வழியே தன் வழியென மோடியும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாதுகாப்புத்துறையின் சகல தளவாடங்களையும் உற்பத்தி செய்வதில் நூறு சதவீதம் அந்நியரின் நேரடி முதலீடு கொண்டே நடைபெறவுள்ளது. இது போன்று இன்னும் பல துறைகளை நவதாராளமயம் விழுங்கப் போகின்றது.

தேர்தல் கால பரப்புரைகள் எல்லாம் குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு எனும் நிலை கொண்டதே. இதுவே முதலாளித்துவப் பாராளுமன்ற மாயையும் ஆகும். இதற்கு மோடி மாயையும் விதிவிலக்கல்ல.