25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முஸ்லிம் மக்கள் மீதான தி;ட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது பல சேன என்கின்ற அமைப்பு ஈடுபட்டு வந்திருக்கின்றது. இவ்வமைப்பானது தனது இனவாதத்தைக் கக்குகின்ற விஷம் பொதிந்த பேச்சுக்களாலும் மற்றும் பலாத்காரமான தீவிரவாத நடவடிக்கைகளாலும் முஸ்லிம் சமூகத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதன் உச்சக் கட்டமாக கடந்த யூன் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகரில் நடைபெற்ற கலவரம் அமைந்துள்ளது.

இந்தச் சம்பவங்களிற்கு பிரதான காரணியாக செயற்படுகின்ற அமைப்பொன்றின்மீது அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், ஊடக வெளிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததென்பது தங்களிற்கு தெரியாதது போன்றும் அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அவை ஒன்றும் பாரதூரமான விடயங்கள் அல்லவென்றும் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

பொது பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசார, எங்களுடைய நாடு ஒரு பௌத்த சிங்கள நாடு என்று மிகவும் கீழ்த்தரமாகப் பேசுகின்ற அதே வேளையில், பொது பல சேனவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த விதானகே, தொலைக்காட்சி ஊடகங்களிற்கு பதிலளிக்கின்றபோது தாங்கள் எந்த மதத்திற்கோ அல்லது எந்த இனத்திற்கோ எதிரான கருத்துக் கொண்டவர்களல்ல என்றும் ஊடகங்கள் தவறாக விடயங்களை விளங்கிக்கொண்டு அவற்றை தங்களுக்கு எதிராக பரப்புவதற்கு முனைகின்றன என்றும் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்.

இலங்கை அரசானது இன்றுவரை இந்த நடைமுறைகள் குறித்து அலட்சியமாக இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த அசம்பாவிதங்களின் பின்னணியில் இலங்கை அரசு இருக்கின்றது என்பது தெரிந்தும் இதைச் சொல்ல வேண்டிய நிலையில் நாம் இருப்பதையிட்டு வருந்தவும் செய்கிறோம்.

முஸ்லிம் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்ற அதேவேளையில் இத்தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது துயரத்திலும் பங்குகொள்கிறது.