25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு - கிழக்கு மாணவர்களின் உரிமைகள், கல்வியைத் தனியார் மயப்படுதல், "சர்வதேச மயமாக்கல்" என்ற போர்வையில் கல்வியின் தரம் குறைக்கப்படுதல், மாணவ - மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைக் கடத்துதல், கொலை செய்தல், அவதூறான வழக்குகளை தொடுத்தல், அவர்களில் கல்வி உரிமைகளைப் பறித்தல் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதன் காரணமாக மாணவர் தலைவர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுகளின் பெயரில் வழக்குகள் தொடரப்பட்டு கைது செய்யப்படுவதும், கொலை மிரட்டல்கள், குடும்ப அங்கத்தவர்களை மிரட்டுதல் போன்ற வன்முறைகளுக்கும் மற்றும் கல்வி கற்கும் உரிமையை பறிக்கப்படுத்தலுக்கும் ஆளாகப்படுகின்றனர்.மாணவர் தலைவர்கள் மீதான இப்பயங்கரவாதம் அனைத்தும் இலங்கை அரசின் போலீஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையால் அதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு, போராடும் மாணவர்களை அடக்கி ஒடுக்க அரசு முனைப்புடன் செயற்படுகின்றது.

அத்துடன், மாணவர் போராடத்தின் மீதான தாக்குதல் வடிவத்தின் புதிய உத்தியாக, இலங்கை அரசில் தலைமை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் உறுப்பினர்கள் தொடக்கம் பாராளுமன்ற உறுபினர்கள் வரை, ஆயுதம் தாங்கிய தமது கட்டாக்காலி அடியாட்களுடன் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்கின்றனர் . இவ்வாறன அரசின் கொடுங்கோண்மையை எதிர்த்து தமது போராட்டத்தை முன்னெடுக்க, தமது பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

மாணவர் போராட்டம், மக்கள் போராட்டமாக முன்னெடுக்காத வரை- மாணவர்கள் தனியாக எதையும் இன்றய நிலையில் சாதித்து விட முடியாது. இதன் வெளிப்பாடாக இப்போ இலங்கையின் தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள், உள்ளூர் உரிமைகளுக்காக போராடும் இயக்கங்கள் ஆகியவற்றுடன் மாணவர்கள் கை கோர்த்துள்ளனர்.

மாணவர்கள் தமது உரிமைப் போராட்டத்தை, போராடும் மக்களின் உரிமைப் பிரச்சனைகளுடன் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஆரம்பமாக, வடக்கின் மூன்று மாவட்டங்கள் தவிர வவுனியா தொடக்கம் கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் கடந்த செய்வாய்க்கிழமை (4.06.2014) தொடக்கம் மக்கள் திரள் ஆர்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர். வடக்கின் மூன்று மாவட்டத்திலும் பாதுகாப்புக் காரணங்களாலும், அங்கு நிலவும் அதிதீவிர இராணுவ ஒடுக்குமுறைகளாலும் தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.