25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது இராணுவ அச்சுறுத்தலையும் மீறி, இனப்படுகொலைக்கு பலியாகிய போராளிகள் உறவினர்கள் மற்றும் மற்றும் மக்களிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சில வாரங்களிற்கு முன்னர் பலாலி இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டிருந்த விரிவுரையாளர்கள், மாணவ தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தினரை அஞ்சலி செலுத்துவது குறித்து மிரட்டும் பாணியில் எச்சரிக்கையினை யாழ் கட்டளைத்தளபதி விட்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதென்பது பயங்கரவாதிகளை நினைகூவர்வதே ஆகும் என்று அவர்களிற்கு எடுத்துக் கூறப்பட்டது, அதற்கு அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வதற்கு தங்களுக்கு உரிமையிருப்பதாக அவர்கள் பதிலளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் ஒருவார காலம் இழுத்து மூடப்பட்டது.

செவ்வாயன்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் இராசகுமாரன் பலாலி இராணுவ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதுடன் மேலதிக கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவுக்கு புதனன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்

இந்தப் பின்னணியில் புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுதிரி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதேநேரம் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்து, வியாழன் முதல் இரண்டு தினங்கள் அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக கூறுகின்ற, புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களின் பிழைப்புவாத தலைவர்கள் தமக்குள் மோதிக் கொண்டிருக்கின்றனர். நினைவு கூரும் நிகழ்வைக் கூட ஒற்றுமையாக செய்ய முடியாத இழிவான நிலையில் இருக்கின்றனர். தமது சொந்த நலன்களிற்க்காக, சிலர் மகிந்தாவுடனும் சிலர் முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பக்க துணையாக நின்று உதவிய இந்தியா முதல் ஜரோப்பா, அமெரிக்காவின் நலன்களிற்க்காக தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியில், தமது உயிரை பணயம் வைத்து நினைவு கூரும் நிகழ்வை நடாத்திய யாழ்.பல்கலைக்கழகத்தினரின் அடக்கு முறைக்கெதிரான குரல் புலம்பெயர் வியாபாரிகளை தமிழ் மக்களின் போராட்ட அரங்கிலிருந்து விலத்தியுள்ளதுடன் மட்டுமல்லாது, தமிழ் மக்கள் அடக்கு முறைகளிற்குள் இருந்து அஞ்சாது மீண்டும் எழுவார்கள் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தெற்கில், இலவசக் கல்வியினை இல்லாதாக்கும் அரசின் திட்டங்களிற்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் அரசிற்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மகிந்த அரசு முன்னெடுக்கின்ற கல்விக் கொள்கையானது சிங்கள மாணவர்களை மட்டுமல்ல தமிழ், முஸ்லீம் மாணவர்களையும் பாதிக்கும் ஒரு திட்டமே. வடக்கு கிழக்கு மாணவர்கள் தெற்கு மாணவர்களுடன் இணைந்து கல்வியை காசாக்கி பணம் பண்ண முனையும் மகிந்த அரசுக்கு எதிராகவும் அதனை நடைமுறைப்படுத்த திட்டங்களை வகுத்தளிக்கும் ஏகாதிபத்தியங்களிற்கும் எதிராக போராட முன்வர வேண்டும்.

இதனால் ஏற்ப்படக் கூடிய புரிந்துணர்வு, நட்பின் மூலம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் அனைவரையும் நினைவு கூரும் உரிமையினை மறுக்கும் அரச பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டத்தினை முன்னெடுக்க முடியும். தெற்கில் இருந்து இன்று வருகின்ற நேசக்கரங்களை யாழ்.பல்கலைக்கழகம் இறுகப்பற்றி ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்.