25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தியாளர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம்

சித்திரைப் புத்தாண்டு தினமாகிய திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த உள்ளுர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.

அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.

வடமராட்சி பிரதேசத்தின் செய்தியாளராக வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் பணியாற்றி வருகின்றார்.

இரவு எட்டரை மணியளவில் தனது தாயாரைப் பார்த்துவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது செல்வதீபன் தாக்கப்பட்டுள்ளார். வெளிச்சமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் யாழ் புறாபொறுக்கி வல்லைவெளியில் வைத்து, ''செய்தியாளரா நீ'' எனக் கேட்டு இரும்புக்கம்பியினால் பிடரியிலும் இடுப்பிலும் தாக்கியுள்ளதாக நெல்லியடி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

திடிரென நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்து, நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரை மேலும் தாக்குவதற்கு அவர்கள் முயன்றுள்ளார்கள். எனினும் செல்வதீபன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து பற்றைக்குள் ஓடித் தப்பியுள்ளார்.

அதேநேரம் அந்த வீதி வழியாக வந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும் செல்வதீபனின் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கண்டு அவ்விடத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த செல்வதீபன் மந்திகை வைத்தியசாலையக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நெல்லியடி காவல்துறையினர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து முன்னர் காணாமல் போயிருக்கும் தனது சகோதரன் தொடர்பாக தனது தாயாருடன் இணைந்து செல்வதீபன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் சாட்சியமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும், தனது சகாக்களிடம் அவர் கூறியிருந்தாகத் தெரிவித்தார்.

வடக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவர்கள் தாக்கப்படுவதும் வழமையான நிகழ்வாகியிருக்கின்றது. இதனால் அங்கு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை, அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன், இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடவாதிருப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.