25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜெனீவாவில் மகிந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள "அமெரிக்க நன்கொடையால்" அரச தரப்பு அளிவில்லா ஆனந்தத்தில் உள்ளது. ஐ.நா.வில் தர்மிஸ்டன் அறிக்கை, நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணையுடன் கூடிய இன்னோரன்னவெல்லாம் இயலாமையின் பாற்பட்டு, கிடப்பில் போடப்படவுள்ளன. தவிரவும் தான் குற்றவாளியானால் தனக்கு மின்சார நாற்காலிதான் என கூறிவரும் மகிந்தாவை சரத் பொன்சேக விஞ்சுகின்றார்.

"போர்க்குற்றங்கள் தொடர்பாக எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்படும் நிலை ஏற்பட்டால் அது நானாகவே இருக்கும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அங்கு பணியாற்றிய தளபதிகளே பொறுப்புக்கூறக் கூடியவர்கள். கொழும்பில் அமர்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் யுத்த களத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து மின்சார நாற்காலியில் அமர வைத்து தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனை எனக்கே விதிக்கப்பட வேண்டும்."

ஏனென்றால் "நாளே போருக்குத் தலைமை தாங்கினேன், நானே திட்டமிட்டேன், நானே கண்காணித்தேன், நானே வழிநடத்தினேன், நானே போர்முனைச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தேன், நானே உத்தரவுகளை வழங்கினேன்"

"இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் எவருக்கு முன்பாகவும் எங்கேனும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்பதை என்னால் ஏற்க முடியாது. அதை நான் நிராக்கரிக்கிறேன்.

தமிழ் மக்கள் அழிவில் தேசிய-சர்வதேசத்தின் பிணம் தின்னும் கொலை வெறிப் பேய்கள் எல்லாம் எப்படி எப்படி அரசியல் பிழைப்பு நடாத்துகின்றார்கள். வாக்கு வங்கிகள் ஆக்குகின்றார்கள். தங்கள் தங்கள் நலன்களுக்கு எல்லாம் எதன்பாற்பட்டு வலுச் சேர்க்கின்றார்கள். இன அழிப்பை நானே செய்தேன், வந்தால் எனக்கே மரண தண்டனை, எங்கே அதுவும் வரட்டும் பார்ப்போம் என மார்தட்டும் கசாப்புக்கடைக்காரனுக்கு இத்துணிவுகள் எங்கிருந்து வந்தது. "நியாயம் பெற்றுக் கொடுக்கும் மனித உரிமை மன்றை" அமெரிக்கக் கழுகுககள் தங்களுக்காக்கியதால் வந்த வினை.

இன்றைய உலகின் "மனித உரிமை மாமன்றங்கள" எல்லாம் அடக்கி-ஒடுக்கப்படும் மானிடத்திற்கானதல்ல. அடக்கி-ஒடுக்கும் ஓடுகாலிகளுக்கானது. நியாத்திற்காக தண்டனை வழங்கும் "தண்டனை வழங்கிகள்" எல்லாம் நம்நாட்டின் தேர்தல் சின்னமாகவும், வாக்கு வங்கியுமாகின்றது. இதனால் கொலை செய்தவன் எல்லாம் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து மின்சார நாற்காலியில் அமர வைத்து தண்டிக்கப்பட்டால், அந்தத் தண்டனை தனக்கே விதிக்கப்பட வேண்டும் எனத் துடிக்கின்றான். புறநானூற்று வீரன் ஆகின்றான். ஏனெனில் எங்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு அப்பேர்ப்பட்ட வரப்பிரசாதம்!

-அகிலன் 07/03/2014