25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலைஞர் குடும்பத்தின் சமகால அரசியல் நிகழ்வுகள் கிட்டத்தட்ட இராமாயண காண்டம்-போல்தான் உள்ளது. தசரத-கைகேகி-கோசலை, பரத-சத்துருக்கன், இராம-லட்சுமணன் வாரிசு-முடியாட்சி கொண்டதொரு அயோத்திய நிலையில் உள்ளது.

அண்ணன் அழகிரியை காடேக வைத்து, தம்பி ஸ்டாலினிற்கு பட்டாபிஷேகம் செய்ய முயலும் தி.மு.க. அரச படலத்திற்கு தசரதன்போல், கலைஞர் தன் "அம்மாக்களுக்கும்" கொடுத்த வரங்களும் ஏதெனும் உண்டோ? எனவும் கேட்கத் தோன்றுகிறது.

தான் கொடுத்த வரத்தால் ராமன் காடேகிவிட்டான் என அறிந்தவுடனேயே தசரதன் உயிர் பிரிந்ததாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் தம்பி ஸ்டாலினுக்கு அரசியல் பட்டாபிஷேகம் என அறிந்தவுடனேயே அதிகாலையிலேயே வந்து தன்னை நித்திரையில் தட்டியெழுப்பி, தன்னுயிரைப் போக்காட்டும் வகையில் அழகிரி நடந்தானெவும், தம்பி ஸ்டாலின் உயிர் மூன்றே மாதத்தில் பிரிந்துவிடுமென சொன்ன மாத்திரத்தில் தன் உயிர் "பிரியும் நிலையிருந்த கண்டத்தையும் தாண்டி, பிரியா வரம் பெற்ற நிலை"யில் உங்களுக்கு பேட்டி தருகின்றேன் என ("தசரதசர்') கலைஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

என்னே நடிப்பு,? என்னே இராமாயண காண்டப் படலங்கள்.?

அழகிரியும் தன் பிறந்த நாளில் ஜனநாயக தி.மு.க. எனும் கட்சியை அமைக்கலாம் என செய்திகள் வருகின்றன. அப்படி அமைந்தால் பெரியாருக்கு பிறகு (தி.மு.க., அண்ணா தி.மு.க., ம.தி.மு.க., தே.தி.மு.க.) ஐந்து தி.மு.க.க்களை தமிழகம் தரிசனம் கொள்ளும்.

எல்லா கழகங்களும் தங்களுக்கு பெரியாரே தலைவர் என்கின்றார்கள. அப்படியானால் திராவிடக் கழகங்களால் தமிழக மக்கள் பெற்று அனுபவித்த பலாபலன்களதான் என்ன? குறைந்ததது பெரியார் கொள்கைகளுக்கும் இப் பஞ்சமா பாதகக் கழகங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

பெரியார் எதை எதை எல்லாம் எதிர்த்தாரோ அவையெல்லாவற்றையும் மூட்டை கட்டி தங்கள் கொள்கை-கோட்பாடுகளாக வகுத்து அரசியல் செய்கின்றன. குறைந்தது பெரியாரின் பகுத்றிவுக் கொள்கை கோட்பாட்டின் அரிச்சுவட்டுப் பாலபாடம் கூட தெரியாத மூடர் கூட்டமாகத்தான் இக்கழகங்கள் யாவும் உள்ளன. தேர்தல் என்று வந்தால் கடவுள் தரிசனம் செய்து நாள் நட்சத்திரம் பார்த்துதான் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றார்கள். கருணாநிதி குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல.

கருணாநிதி குடும்பம் இந்தியாவில் அல்ல, உலகின் அதியுயர் பணக்கார வர்க்கக் குடும்பங்களில் ஒன்று. அதேபோல் ஊழலில் கொடி கட்டிப் பறப்போர்களில், இவர் குடும்பமும் ஓகோ…எனும் நிலை. இப்படிச் கொள்ளையடித்த சொத்தை எதிர்காலத்திலும் பன்மடங்காக்க, பரதனா? ராமனா? எனும் இராமாயண வடிவில், ஸ்டாலின் பட்டாபிஷேக அரசியல் நடைபெறுகின்றது.

இதனால் தமிழக மக்களுக்கு ஆவதுதான் என்ன? "மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்? அவன் தேடிய செல்வங்கள் அனைத்தும் வேறிடத்தில் சேர்வதால் வரும் தொல்லையடி"… எனும் பட்டுக்கோட்டையாரின் சினிமாப் பாடலை இச்சினிமா அரசியலாளர்களுக்கே சமர்ப்பணம் செய்யலாம்