25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகாரத்தின் கீழ் அதிகாரப் பலம், பண பலம், ஜனநாயக விரோத வழிமுறைகளைக் கொண்டே இத்தேர்தலை அரசாங்கம் நடத்துகின்றது. அதேவேளை அபிவிருத்தி, சலுகைகள், பண நன்கொடைகள் என்பவற்றை தாராளமாக வழங்கி ஆளும் தரப்பு வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுக்கொள்ள முன்னின்று வருகின்றனர். இத்தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெறுவதன் ஊடாக மக்கள் தமக்கு ஆணையும் அங்கீகாரமும் வழங்கியுள்ளதாகக் காட்டி இப்போது மக்கள் மீது சுமத்தி வரும் கடுமையான பொருளாதார சுமைகளையும் தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கே முன்னிற்கிறது.

அதேவேளை எதிர்தரப்பு கட்சிகள் உழைக்கும் மக்களும் தேசிய இனங்களும் எதிர்நோக்கும் இன வர்க்க ஒடுக்குமறைகளுக்கு எதிரான எவ்வித கொள்கை வேலைத்திட்டங்களும் இன்றி இத் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. வெறுமனே மாகாண சபைகளில் பதவிகள் பெறுவது அல்லது ஆளும் தரப்பாக்கி கொள்வது எனும் குறுகிய இலக்குகளுடனேயே தேர்தல்களில் பங்குகொள்ளுகின்றனர். மேலும் பேரினவாத ஓடுக்குமறைக்கு எதிரான பட்டறிவுடனான சமகால யதார்த்தத்திற்கு பொருந்தக் கூடிய புதிய கொள்கை வேளைத்திட்டங்கள் எதுவுமின்றி தொடர்ந்தும் பழைமைவாத ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டுடனேயே தமிழ்த் தரப்புக் கட்சிகள் இணைந்து நின்று போட்டியிடுகின்றன. இது தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தி சரியான வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரட்டுவதை திசைதிருப்பி வெறும் வாக்குப் போடுபவர்களாக மட்டும் வைத்திருக்கும் பழைய நிலையை புதுப்பித்துக்கொள்வதாகவே உள்ளது. இத்தகைய சூழலில் மேற்படி தேர்தல்களில் பங்கு கொள்வது அர்த்தமற்றதும் பயன் தரக்கூடியதும் அல்ல என்பதால் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி தேர்தல்களில் பங்கு கொள்ளவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டது.

இப்போது தேர்தல் பிரசாரங்கள் வேகமடைந்துள்ள சூழலில் எமது கட்சிக்கு கடந்த கால தேர்தல்களில் ஆதரவு தெரிவித்து பிரசாரப் பணிகளில் ஈடுபட்டவர்களும் வாக்களித்த மக்களும் வாக்களிப்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொள்வது எனக் கட்சியிடம் கேட்டு நிற்கின்றனர். எனவே வாக்களிக்க விரும்புவோர் எக்காரணம் கொண்டும் பேரினவாத ஒடுக்குமுறையினை முன்னெடுத்து வரும் அரசாங்க தரப்பிற்கும் ஏனைய பெரும் முதலாளிய பேரின வாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்களுக்கும் வாக்களிக்கக் கூடாது.

எனவே பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி நிலைப்பாட்டிற்கும் உழைக்கும் மக்கள் சார்பாகவும் இருக்கக்கூடியவர்களை அடையாளம் காணுமிடத்து அத்தகையோருக்கு வாக்களிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.

மத்திய குழு

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி

ஊடகங்களுக்கான அறிக்கை

05.09.2013