25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

படுகொலைகள்தான் சிறிலங்க-ஜனநாயக "சிற்ருவேசன்"

இலங்கையில் சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் துயர்வாழ்வு சொல்லனா சோகங்கள் கொண்டது. இவ்வகையில் 2006ம் ஆண்டிலிருந்து களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்த பிரான்சிஸ் நெல்சனின் மரணத்தை இயற்கை எய்தலாக கொள்ள முடியாதென அவரது மனைவி அறுதியிட்டு கூறியுள்ளார்.

2006ம் வருடம் முதல் ஏறக்குறைய ஏழாண்டுகள் சிறையில் தனது வாழ்க்கை காலத்தை கழித்த நெல்சனின் உடலின் பல பாகங்களிலும் எறிகணை சிதறல் துண்டுகளும், துப்பாக்கி சன்னங்களின் துகள்களும் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏழாண்டுகளில் இவர் உடல் சரியாக பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்கேற்ற மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் நெல்சனின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.

சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் பேரினவாத இனவெறி கொண்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஊடாக திட்டமிட்டே சாகடிப்படுகின்றார்கள்.

கடந்த ஏழாண்டுகளாக சிறைகளில் உள்ள ஏகப்பெரும்பாண்மையான தமிழ் சிறைக்கைதிகள் ஏன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது அரசிற்கும் தெரியாது. சிறைக்கைதிகளுக்கும் தெரியாது. இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத விந்தை கொண்ட புதிராகும்.

சாதாரண நடைமுறையில் உள்ள சட்டவாக்கங்களின் பிரகாரம் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரின் குற்றம் நிருபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியானால் தண்டனை வழங்கப்படவேண்டும். அல்லது விடுதலை செய்யப்படவேண்டும்.

கடந்த ஏழாண்டுகளில் தமிழ் கைதிகளுக்கு இவ்விரண்டும் நடைபெறவேயில்லை. ஆனால் பொத்தாம் பொதுவாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் என சொல்லியே அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு இப்போதும் என்ன தேவையென நவநீதம்பிளளை தனனைச் சந்தித்த நீதி அமைச்சரிடம் கேட்டபோது, பயங்கரவாதம்தான் பிரதான காரணம். இதற்கான மேல் விளக்கம் மகிந்த-கோத்தபாயவிடம்தான் உள்ளது எனச் கூறியுள்ளார்.

உண்மையில் பயங்கரவாதச் சட்டம் ஏன் இப்போதும் உள்ளது என்பது நீதி அமைச்சருக்கு மாத்திரமல்ல, மகிந்த சகோதரர்களுக்கும் தெரியாது. கேட்டால் இதுதான் இன்றைய சிறிலங்க-ஜனநாயக "சிற்ருவேசன்" என்கின்றார்கள்.

சிறிலங்காவைப் போன்று ஆசியாவில் வேறெந்த நாட்டிலும் இந்தளவுக்கு ஜனநாயகம் இல்லை.

என்நாட்டில்; தானெ, தன்நிலை தெரியாது பிதற்றும்; ஜனநாயகவாதிக்கு தான் மின்சாரக் கதிரைக்கான குற்றவாளியும், பயங்கர-சர்வாதிகாரியும் என்பதை வலராறுதான் உணர வைக்கும். அந்த வரலாற்றை மக்கள் மௌனமாக எழுதிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.