25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார். இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

ரப்பர் பொருட்களும், கையுறைகளும் தயாரிக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ரப்பர் பொருட்களும், கையுறைகளும் தயாரிக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள், நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைவது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அப்பகுதியில் உள்ள முக்கிய பௌத்த பிக்குகள் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியோருடன்  பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

போராட்டம் வலுப்பெற்ற நிலையில், வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்ட போதே, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு ஒரு பதட்டமான சூழல் நிலவுவதாகவும் செய்தயாளர்கள் அப்பகுதிக்குள் போவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

இந்த நவகாலனித்துவ அரசிற்கு மக்களின் எத்தகைய நலன்கள் குறித்தும் அக்கறை கிடையாது. குறிப்பாக இன, மத பேதமின்றி மக்களை சுரண்டுவதே பிரதான குறிக்கோள். இந்த அரசு தனது குடும்ப லாகத்திற்க்காகவும், அந்நிய எஜமானர்களின் நலன்களிற்க்காகவும் சொந்த மக்களை ஒட்ட சுரண்டுவதனையே குறிக்கோளாக கொண்டுள்ளது. சுரண்டவும் கொலை செய்யவும் எப்போதும் தயாராக ஒரு பாசிசப் படையினை தயார் நிலையில் வைத்துள்ளதனை இச் சம்பவம் தெளிவாக்கியுள்ளது.