25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழுவயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்தேறியுள்ளது. இதனைச் செய்தவர்கள் மனிதப் பிசாசுகளாகவே இருக்க முடியும். அதேவேளை இச்சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களாகியும் அக்கொடிய குற்றவாளிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அச்சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபரோ அல்லது நபர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை. இது ஏன் என்றே மக்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மேற்படி மாணவி மீதான மனிதப் பிசாசுகளின் பாலியல் வன்புணர்ச்சி சித்திரவதையினை எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. சந்தேகத்திற்குரிய அக்குற்றவாளிகள் எவராயினும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எமது கட்சி வற்புறுத்துகிறது.

இக்கொடூரச் செயலைக் கண்டித்து திங்கள் காலை 10 மணியளவில் நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் முன்னால் வவுனியா நகரில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு நடாத்தும் கண்டன எதிர்ப்பு கவனயீர்ப்புப் போராட்டத்தில் கட்சி கலந்துகொள்வதுடன் மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத இவ் இழிசெயலைக் கண்டிக்கும் அனைத்து மக்களும் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கின்றது.

–பொதுச் செயலாளர்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி