25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடல் அட்டைகளை பிடிப்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனா.

உள்ளுர் மீனவர் சங்கமொன்றின் தலைவரான எம். சுப்பிரமணியம் இது பற்றி தெரிவிக்கையில், புத்தளம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவாகளுக்கே இது தொடர்பான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வாயுச் சிலிண்டர்கள், சக்தி வாயந்த டோர்ஜ் லைட் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி இத்தொழிலில் அவர்கள் ஈடுபடுவதால் கரையோரத்தை நாடும் மீன் இனங்கள் கலைந்துவிடுகின்றன என்றும் அதனால் கரையோர மீன் பிடித் தொழிலே அநேகமாகப் பாதிப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

அது மட்டுமன்றி குறிப்பிட்ட மைல்களுக்கு அப்பால் கடல் அட்டைகளை பிடிப்பதற்கு இரவு நேரங்களில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அதனை மீறும் வகையிலே அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுவருவகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மீன்பிடி இலாகா அதிகாரிகளிடம் தங்களால் புகார் செய்யப்பட்டும், தலைமையகத்தினால் வழங்கப்படும் அனுமதிக்கு தங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறி அவர்கள் கைவிரித்து விடுவதாகவும் கதிரவெளி மீனவர் சங்க தலைவர் எம். சுப்பிரமணியம் கவலையுடன் தெரிவிக்கின்றார்.

உள்நாட்டில் சட்ட ரீதியாக அங்கிகரீக்கப்பட்ட 17 வகையான மீன் பிடித் தொழில்களில் கடல் அட்டை பிடித்தலும் அங்கீகரிக்கப்பட்டதாகும் என மாவட்ட கடற்றொழில் உதவி இயக்குநர் எஸ்.ரி. ஜோர்ஜ் தெரிவிக்கின்றார்.

வாகரைப் பிரதேசத்தில் கடல் அட்டை பிடிப்பதற்கு 200 பேருக்குரிய அனுமதி கொழும்பிலுள்ள மீன்பிடித்துறை தலைமை காரியாலயத்தினால் வழங்கப்பட்டுள்ளது என்றும் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிழக்கு கடலில் கடல் அட்டைகளை பிடிப்பதற்கான அனுமதியை இவர்கள் பெற்றுள்ளதாகவும் கூறும் அவர் வாகரை பிரதேச மீனவர் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள ஆட்சேபனை தொடர்பாக தான் தனது தலைமை காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.