25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அசாத் சாலி

இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் மூன்றாவது நாளாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அசாத் சாலியின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அவரை சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

இதற்கிடையே, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்படி கோரும் அமைப்பொன்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே அரசாங்கம் அசாத் சாலியை கைதுசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.

பத்திரிகைச் செவ்வி- இன முரண்பாடு- பயங்கரவாதத் தடைச் சட்டம்

நாட்டில் இனவாத, மதத் துவேஷக் கருத்துக்களை வெளியிட்டுவந்த கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகளுக்கு அரசாங்கத்துடன் நேரடித் தொடர்புள்ளது என்பதை அசாத் சாலி வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.

இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக உண்மையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அச்செயற்பாடுகளை எதிர்த்த அசாத் சாலியை அரசாங்கம் கைதுசெய்திருப்பதாகவும் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியொன்று தொடர்பிலேயே பாதுகாப்புத் தரப்பினர் தன்னிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியுள்ளதாகவும்,தான் வெளியிடாத கருத்தொன்று அந்த சஞ்சிகையில் வெளியானமை பற்றி உடனடியாகவே தான் குறித்த சஞ்சிகைக்கு செய்தித் திருத்தம் அனுப்பியிருந்ததாகவும் அசாத் சாலி கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.

தனது தரப்பு விளக்கங்களை அளித்த பின்னரும் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அசாத் சாலி உண்ணாநோன்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழும் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

ஆனால், அந்தச் சட்டவிதிகளின் கீழ் கைதுசெய்யப்படுமளவுக்கு அசாத் சாலி குற்றம் எதனையும் புரிந்திருக்கவில்லை என்று அவரின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக அரசாங்கம் குறிப்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கம் அடுத்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அளிக்கப்படும் என்று இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.