25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நல்ல முடிவெடுத்தால் அனைத்து பிரச்சனையையும் சுலபமாகத் தீர்ப்பாராம்??..!!

வடமாகாண தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு முடிவினை எடுப்பார்களேயானால், பலாலியில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை சுலபமாக தீர்க்கப்பட்டுவிடக் கூடியதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்!

டக்ளஸ் வடமாகாணத் தேர்தலில் தமிழ் மக்களிடம் ஏதிர்பார்க்கும் நல்ல முடிவுதான் என்னவோ? அரசையும் தன்னையும் தேர்தலில் ஆதரிக்க வேண்டும். தங்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள் என்பதுதானே?...

சரிதான் தலைவர்களே! எது எப்படி இருந்தபோதிலும் இப்போதாவது தமிழ் மக்கள் பற்றிய சரியான மதிப்பீட்டிற்கு வந்ததையிட்டு (சந்தேகம்தான் என்றாலும்) முதலில் உங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

கடந்த காலங்களில் தாங்களும் தங்கள் அரசும் ஓட்டு மொத்த தமிழ் மக்களையும் புலியாகவே (புலிக்கும்-மக்களுக்கும் பேதம் புரியாது) வரித்துக்கொண்டவர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தமிழ் மக்கள் புலிகளை ஆக்கியதிலும், இல்லாதாக்கியதிலும் ஆற்றிய பங்கை நீங்கள் வரலாற்றுக் கண்கொண்டு பார்க்கத் தவறியவர்கள். ஆனால் மக்கள் மாங்காய் மடையர்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் தான் வரலாற்றைப் படைப்பவர்களும் கூட.

இதைக் கற்றறிந்துதான் நீங்கள் தற்போது தமிழ் மக்களிடம் நல்ல முடிவு கேட்கிறீர்கள் என்பதும் பொருளல்ல.

கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கு செய்ய வேண்டியதை தாங்களும் தங்கள் அரசும் மனச்சாட்சி கொண்டு அந்தரங்க சுத்தியுடன் சரியாகச் செய்திருந்தால் நீங்கள் கேட்காமலே அவர்கள் நல்ல முடிவு எடுத்திருப்பார்கள்.

இன்றும் காலம் கடந்து போகவில்லை…..??

தமிழ் மக்களை முதலில் இலங்கை மக்களாக மதியுங்கள். அவர்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனடிப்படையில் ஓர் குறைந்த பட்ச தீர்வையாவது வைத்து பிரச்சினையை தீர்க்க முயலுங்கள்.

அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தங்களின் திட்டமிட்ட சகல இனவாத-இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள.

முதலில் குறைந்தபட்சம் இவைகளையாவது நடைமுறை கொண்டு அந்தரங்க சுத்தியுடன் செய்ய-செயற்பட முற்படுங்கள்.

செய்வீர்களா?.....செய்தால் தமிழ் மக்கள் மனங்களை நம்பவைக்க முடியும். அந்த நம்பிக்கைக்கு ஊடாக அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவிற்கு வருவார்கள்..