25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பலாலி மற்றும் காங்கேசன்துறை இராணுவ தளங்களின் தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன.

 

இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், 27 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு மீள்குடியேற்றம் அனுதிக்கப்படாத பகுதியிலேயே காணிகளைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார்.

வலிகாமம் வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் வலிகாமம் கிழக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளிலும் காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள், அங்கு காணிகளில் மீதமுள்ள சேதமடைந்த வீடுகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து 9 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரம் பேர் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்து நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர்.

தங்களை தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இந்த மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்திருக்கின்றனர். அத்துடன் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களையும் அவர்கள் நடத்தியிருக்கின்றனர்.

'நீதிமன்றம் மக்கள் மீள்குடியேற்றத்தைக் கோருகிறது'

அத்துடன் பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பொன்றில் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களைப் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் கூறினார்.

அத்துடன், அந்த உத்தரவு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இடைக்கால உத்தரவில் உள்ள அந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தக் காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ.சிவஸ்வாமியின் கையெழுத்துடன் ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில், இராணுவத்தின் யாழ்ப்பாண பாதுகாப்பு பட்டாலியனின் தலைமையகம் அமைப்பதற்காகவும், பலாலி மற்றும் காங்கேசந்துறை இராணுவ தளங்களின் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகவும் இந்தக் காணிகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.