25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் கனடாவில் காலமானார். நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் 22 மாசி 2013 அன்று ரொறன்ரோவில் காலமானார்.

இளம் வயதிலேயே சமூக அநீதிகளைக் கண்ட சண்முகலிங்கம் அவர்கள் இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டு தொழிற்சங்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னிக்கு இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். கலாநிதி ராஜசுந்தரம், டேவிட் ஐயா, சந்ததியார், சுந்தரம் ஆகியோருடன் இணைந்து, காந்திய அமைப்பின் இறுதிக்காலம் வரைக்கும் மலையக மக்களின் விடிவுக்காக உழைத்தவர் இவர்.

அத்துடன் எண்பதுகளில் கைதாகி சிறைவாசமும் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னால், இந்தியா சென்று இயக்க முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு உதவி செய்திருந்தார்.

கனடா வந்த இவர் தேடகம் அமைப்புடன் தொண்ணூறுகளின் இறுதிவரை இணைந்து செயற்பட்டார். அதன் பின்னர் மாற்றுக்கருத்தாளர்களுடன் இணைந்து பல்வேறு அரசியல், கலை, இலக்கிய முயற்சிகளில் தன்னாலான நிறைந்த பங்களிப்புகளையும் செய்திருந்தார். மனவெளி, கருமையம் போன்ற அமைப்புகளுடனும் புத்தகவெளியீடு போன்ற முயற்சிகளிலும் இவர் கடுமையாக உழைத்திருந்தார்.

தமிழ்த் தேசிய அரசியலில் நிறைந்திருந்த இனவாதத்தன்மையை முற்றாக நிராகரித்ததுடன், அது கனடாவில் வெளிப்படுத்திய ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து நின்று முகம் கொடுத்து விமர்சித்தவர் இவர்.

தன்னுடைய சுயநலத்திற்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் இயல்புகள் இல்லாத இவர், இறுதிவரைக்கும் தான் தேர்ந்தெடுத்த கொள்கைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

இவருடைய மறைவு சமூக நேயமும் மனித நேயமும் உள்ளவர்களுக்கு பெரும் இழப்பாகும்.

இவருடைய பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், தோழர்களுடன் இந்த தாங்க முடியாத் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

கருமையம்-கனடா

26/02/2013