25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009ம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மனிதாபிமான யுத்தம் என்னும் பெயரில் முன்னெடுத்த கொடூர ராணுவ நடவடிக்கைகளின் படுபாதகச் செயல்களை எத்தகைய பொய்கள் புனைவுகளாலும் மூடிக் கட்ட முடியாது. அவை பற்றிய தகவல்கள் ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச ஜனநாயக – மனித உரிமை அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது. ஒரு பச்சிளம் பாலகன் பழிவாங்கும் நோக்குடன் கொல்லப்பட்டிருப்பதானது ஒவ்வொரு தாய் தந்தையரையும் அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப் படங்கள் காலம் கடந்து வெளிவந்திருப்பினும் அதன் ஊடாக யுத்தத்தின் கொடூரங்களும் யுத்த விதிகளின் மீறல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை எமது புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மஹிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த இறுதி நாட்களிலான கொடூர யுத்தத்தில் முல்லைத்தீவின் கடலோரப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். அவர்களில் வயோதிபர்கள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர், யுவதிகள், பச்சிளம் பாலகர்கள் உள்ளடங்கி இருந்தனர். அத்தகைய பாலகர்களில் ஒருவராகவே பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படுபாதகச் செயல் மனித நேயத்திற்கும் மனித தர்மத்திற்கும் அப்பாலான பழிவாங்கும் வக்கிரத்தோடு செய்யப்பட்டிருக்கும் படுகொலையாகும். இது உள்நாட்டு யுத்தச் சட்டவிதிகளுக்கோ அல்லது எற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளுக்கோ உட்பட்டதல்ல.

மேலும் சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைப் பற்றியும் சிறுவர் உரிமைகளுக்காகச் செயல்படுவதாக உள்நாடு முதல் உலக நாடுகள் வரை உரத்துக் கூறி வந்தவர்களான இவ் ஆட்சியினர் இறுதி யுத்தத்தில் பன்னிரண்டு வயதுப் பாலச்சந்திரன் போன்று எத்தனை இளம் தளிர்களைத் தமது துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கி இருப்பாகள் என்றே சிந்திக்க வைக்கிறது. எனவே அரசாங்கமே இதற்கான பொறுப்பையும் பதிலையும் கூறவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் பேச்சாளர்களும் பாதுகாப்புச் செயலாளரும் மறுப்பு நியாயங்களே கூறி வருகின்றனர்.

அதே வேளை ஜ.நா.வும், மனித உரிமைகள் பேரவையும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இறுதி யுத்த கால மனித உரிமை மீறல்களுக்கோ அல்லது பாலகன் பாலச்சந்திரனின் படுகொலைக்கோ நீதியும் நியாயமும் தேடித் தருவார்கள் என நம்புவது அர்த்தமற்றவொரு எதிர்பார்ப்பாகவே இருக்க முடியும். ஏன்எனில் இறுதி யுத்தத்தின் பேரழிவுகளுக்கும் பாலச்சந்திரன் போன்ற இளம் தளிர்களின் கொலைகளுக்கும் இதே நாடுகளும் பொறுப்புதாரிகளேயவர். எனவே இக் கொலைகளுக்கு நியாயம் பெற வேண்டுமாயின் ஒரே மாற்று வழி அரசாங்கத்தால் திசை திருப்பி வைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களைச் அரசியல் ரீதியில் சிந்திக்க வைத்து. அவர் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டு நிற்க வைப்பதோ உரிய வழியாகும். நாளை சிங்கள மக்களுக்கும், இளைஞர், யுவதிகளுக்கும், பச்சிளம் பாலகர்களுக்கும் இதே கதி ஏற்படவே செய்யும் என்பதை சிங்கள உழைக்கும் மக்களுக்கு எடுத்துரைப்பது நமது கடமையாகும்.

புதிய ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி

24/02/2013