25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியத் தலைநகர் தில்லியில் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்திருந்த துணிகர துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் சதியில் உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குரு சனிக்கிழமை காலை தில்லி அருகேயுள்ள திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்குப் பின் கருத்து வெளியிட்ட இந்திய உள்துறைச் செயலர் ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.

அஃப்ஸல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியால் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் கலவரம் வரலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியறிந்து இந்தியத் தலைநகர் தில்லியில் வாழும் காஷ்மீரிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காஷ்மீரிலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அஃப்ஸல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வரவேற்றுள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என்று அஃப்ஸல் குரு தொடர்ந்து வாதாடினார்.

அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்கவிலை என்றே மனித உரிமைக் குழுக்களும் கூறிவந்தனர்.

இந்திய அரசாங்கம் அஃப்ஸல் குருவை ரகசியமாகத் தூக்கிலிட்டு விட்டனர் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

அஃப்ஸல் குருவை தூக்கிலிடப்படப்போகும் தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அஃப்ஸல் குருவின் குடும்பத்தாருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக இந்திய அரசு கூறுகிறது.

தூக்கிலிடப்பட்டுள்ள அஃப்ஸல் குருவை திஹார் சிறைக்குள்ளேயே புதைத்திருப்பதாகவும், ஆனால் இறுதிக் கிரியை செய்வதற்காக அவரது குடும்பத்தார் உடலைக் கேட்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துணிகரம்

இத்தாக்குதலில் 5 ஆயுததாரிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர்

இத்தாக்குதலில் 5 ஆயுததாரிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர்

13 டிசம்பர் 2001 அன்று துப்பாக்கிதாரிகள் ஐந்து பேர் இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து பொலிஸ்காரர்கள் எட்டு பேரையும், தோட்டப் பராமரிப்பாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றிருந்தனர்.

பின்னர் அந்த ஆயுததாரிகள் ஐந்து பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

ஜெய்ஷ் இ முஹம்மது என்ற ஆயுதக் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்றும் இக்குழுவுக்கு பாகிஸ்தானுடைய ஆதரவு உள்ளது என்றும் இந்தியா குற்றம்சாட்டியது.

இந்தத் தாக்குதலுக்கு திட்டமிட்டதில் உதவினார்கள் என்பதற்காக அஃப்ஸல் குருவுக்கும் ஷௌகத் ஹுசைன் என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஷௌகத் ஹுசைனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மேல்முறையீட்டில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அஃப்ஸல் குருவின் மேல்முறையீட்டை இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.

அவரது கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் சில நாட்கள் முன்புதான் நிராகரிக்கப்பட்டிருந்தாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.