25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலர் கோத்தாபாய ராஜபக்ஷவிடம் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இன்று கையளித்தார்.

போர்க் குற்றவாளிகள் தாம் குற்றம் செய்தே இல்லை என்று தம்மை பரிசோதித்து அறிக்கை விட்டுள்ளார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா? சர்வதேச யுத்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இராணுவ விசாரணை சபை, இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த விசாரணை சபையின் அறிக்கை இராணுவத்தளபதியினால் ஆராயப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கள இனவாதத்தினையும் பௌத்த மதவாதத்தினையும் தமது அரசியல் அடிப்படையாக கொண்டு ஆளும் சிங்கள பெரும் தரகு முதலாளித்துவ கும்பல் இன்றைய நவகாலத்துவ சூழலில் தனது எஜமானர்களுடன் கூடி இந்த நூற்றாண்டின் பெரும் இனப்படுகொலையினை நடத்தியது. யுத்தத்தின் பின்னர் சீன முதலீடுகளும் செல்வாக்கும் அமெரிக்கா, ஜரோப்பிய முதலீடுகளை விட அதிகளவில் காணப்படுவதும், சீனாவின் பொருளாதார ஆதிக்கமும் செல்வாக்கும் இலங்கையில் ஏனைய முதலாளித்துவ நாடுகளை ஓரம்காடடச் செய்துள்ளது.

அமெரிக்காவும் ஜரோப்பாவும் சீனாவினை ஓரம் கட்டி தமது பொருளாதார நலன்களை நிறுவிக்கொள்ளும் நோக்கத்திலேயே வன்னி இறுதி யுத்த இனப்படுகொலையினை தமக்கான ஒரு ஆயதமாக எடுத்துக் கொண்டனர். அதன் விளைவே ஜ.நா சபை வரை இலங்கைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் பெருத்த நெருக்கடி தோற்றுவிக்கப்படடுள்ளது. இந்த நெருக்கடி மூலம் இலங்கையில் தமது பொருளாதார ஏனைய நலன்களை நிறுவிக் கொள்வதே பிரதான நோக்கம். தமிழ் மக்களின் மேலான இனப்படுகொலை குறித்த கரிசனை தான் அமெரிக்கா மற்றும் ஜரோப்பா நாடுகளின் இலங்கை அரசு மீதான நடவடிக்கைகளுக்கு காரணம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது முட்டாள் தனமானது.

காலத்திற்கு காலம் ஆளும் முதலாளித்துவக் கும்பல்கள் பேச்சு வார்த்தைகள், விசாரணைக் கமிசன்கள் என மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கின்றது. உண்மையில் தேர்தல், பாராளுமன்றம், நீதிமன்றம் எல்லாம் இந்த பொருளாதார அமைப்பையும், பரந்து பட்ட மக்கள் விரோத அரசியல் அமைப்பையும் பாதுகாக்கும் போலி ஜனநாயக வடிவங்களாகும்.. மக்களை திசைதிருப்பிக் கொள்ள காலங்காலமாக உருவாக்கப்படும் போலி நாடகத்தின் ஒரு அங்கமாகும் இந்த அறிக்கை!