25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் தமது உறவுகளைத் தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றன

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தமது உறவுகளைத் தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச்சென்றதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார்.

மக்கள் தமது காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துச் சென்றதாகவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தலைவி தெரிவித்தார்.

'கப்பம் வாங்கியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள்'

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்டபோது அவர்களை விடுவிப்பதற்காக தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.

2008 முதல் 2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு காணமல்போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில் அங்கம் வகிப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவி பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தம்பலகாமம் பகுதியில் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி இலங்கை படைத்தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.