25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியது.

அதேவேளை, அந்த மாணவர்கள் புனர்வாழ்வுப் பயிற்சி முடிந்தபின்பே விடுதலை செய்யப்படுவார்கள் என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியிருக்கின்றார்.

மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் மாலை நாலரை மணியளவில் முடிவடைந்தது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் தலைமையில் பீடாதிபதிகளும் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை பலாலி படைத்தளத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிபந்தனை விதிப்பதைத் தவிர்த்து படிப்பைத் தொடருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க கூறியிருக்கின்றார்.

தமிழ் அரசியல் தலைவர்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் தலைவர்களின் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கண்ணீர்விட்டு கதறி உருக்கமாக வேண்டுகோள் விடுத்த போதிலும், மாணவர்கள் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்பே விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.

மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகள் இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில் தாங்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

இருப்பினும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்தை மீண்டும் செயல்முறைக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சித்தமைக்காகவே இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி கூறியுள்ளார்.

எனவே, பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கும் மாணவர்களின் விடுதலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் நிபந்தனைகள் விதிப்பதைக் கைவிட்டு மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் ஹத்துருசிங்க தெரிவித்திருக்கின்றார்.